அதென்ன வானத்துல.. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போதே நடந்த "சம்பவம்".. அய்யோ.. போச்சே போச்சே
திருப்பத்தூர்: ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் விண்கற்கள் விழுந்ததில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் பூமியை நோக்கி ஆயிரக்கணக்கில் விண்கற்கள் வந்து விழும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனோடு உரசி எரிந்து சாம்பலாகிவிடும். அல்லது மிகவும் சிறிய அளவில் பட்டாணி சைஸில் கரைந்துவிடும். இதையும் தாண்டி சில கற்கள் முழுவதும் எரியாமல் பூமியை தாக்குவதுண்டு. இந்த கற்கள்தான் அவ்வப்போது சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அப்படிதான் திருப்பத்தூர் மாவட்டத்தில் எரிகல் விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டையை சேர்ந்தவர் வாசு. இவர் தெக்குப்பட்டு கிராமத்தில் ஊதுபத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல சனிக்கிழமையன்று இரவு 8 மணியளவில் வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு வாசு தொழிற்சாலையை மூடி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். நள்ளிரவு நேரத்தில் அவரது தொழிற்சாலையில் பயங்கர வெடி சத்தம் கேட்டிருக்கிறது. இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து தொழிற்சாலையை நோக்கி ஓடியுள்ளனர். தொழிற்சாலை தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஊர் மக்கள் வாசுவுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். வேலூர் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணி ராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி ஆகியோர் முதற்கட்டமாக தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பல முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதுதான் தீ விபத்திற்கு காரணம் என்று கூறியுள்ளனர். அதாவது இந்த தொழிற்சாலையிலிருந்து வித்தியாசமான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கற்கள் சாதாரண கற்களை போல தெரியவில்லை என்று சந்தேகித்த அவர்கள் அதனை பரிசோதித்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்தனர். அதாவது இது விண்கல் என்றும், இந்த கல் தாக்கியதால்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர். இருப்பினும் இது முதற்கட்ட பரிசோதனைதான் என்றும், இந்த கற்கள் சென்னையில் உள்ள ஆய்வு தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்கள் கொடுக்கும் ஆய்வு முடிவுகள்தான் இறுதியானது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல இந்த ஊதுபத்தி தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை சுற்றி சுமார் 3 கி.மீ பரப்பளவில் இந்த விண்கற்கள் விழுந்துள்ளதாக கூறியுள்ளனர். தொழிற்சாலை மீது விண்கற்கள் விழுந்ததை சிலர் நேரில் பார்த்ததாகவும் கூறியுள்ளனர். தற்போது தொழிற்சாலையிலிருந்து மட்டும் சுமார் 10க்கும் அதிகமான எரிகற்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நாட்டாறம்பள்ளி அருகே இதுபோன்று எரிகற்கள் விழுந்து சேதங்கள் ஏற்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன்னர் இங்குள்ள கல்லூரி ஒன்றில் விழுந்த விண்கல் கடுமையான சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications