ஜல்லிக்கட்டு... சட்டத்தின் நிலைப்பாடும், கட்சிகளின் 'மாடுபிடி' அரசியலும்!
-ஆர் மணி
தமிழ் நாட்டில் இந்த ஆண்டாவது ஜல்லிக் கட்டு நடக்குமா, நடக்காதா என்ற பட்டிமன்றம் நாளும், பொழுதும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.
அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தொலைக் காட்சிகள் மற்றும் இன்ன பிற ஊடகங்களிலும் விவாதப் பொருளாக ஜல்லிக்கட்டுதான் தற்போது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. சாமானியர்களும் தனிப்பட்ட முறையில் தங்களது நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் வட்டாரங்களில் பேசும்போதும் இப்போதெல்லாம் இந்தாண்டின் ஜல்லிக்கட்டின் தலையெழுத்துப் பற்றியும் அதிகமாகப் பேசிக் கொண்டுதானிருக்கின்றனர். இந்த வகையில் அனைவரது கவனத்தையும் ஒரு சேர ஈர்த்திருக்கும் ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்தப்படாமல் போயிருக்கும் - 2015 பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக் கட்டு நடத்தப் படவில்லை - சூழலுக்கு முக்கிய காரணியான 2014 ம் ஆண்டு மே 7 ம் தேதி வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ அல்லது இரண்டு நீதிபதிகள் வழங்கிய அத்தீர்ப்பின் சாராம்சம் பற்றியோ எந்த அரசியல் கட்சியும் பெரிய அளவில் பேசாமல் இருப்பதுதான் தமிழ் நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் மோசடி அரசியலை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

இப்போது அந்த தீர்ப்பு பற்றிய ஒரு தெளிவான ஃபிளாஷ்பேக்...
2009 ம் ஆண்டில் அப்போதய மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஒரு சட்டத்தை இயற்றியது. ஏனெனில் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜல்லிக் கட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்டு வந்தன.
2004 ம் ஆண்டில் ஜல்லிக்கட்டில் தனது மகனைப் பறிகொடுத்த ஒரு தந்தை இந்த விளையாட்டுக்களுக்குத் தடை கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை நாடினார். அதில் சூடு பிடிக்கத் தொடங்கியது இந்த விவகாரம். 2006 முதல் 2008 ம் ஆண்டு வரையில் ஒவ்வோர் ஆண்டும் உச்ச நீதிமன்ற உத்திரவின்படி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பின்னர் 2009 ம் ஆண்டில் கருணாநிதி அரசாங்கம் தமிழ் நாடு ஜல்லிக்கட்டு சட்டம் என்ற ஒன்றை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் 2011 ல் ஆமோதித்தது. ஆனால் இதனை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியமும், வேறு சில விலங்கின ஆர்வலர்களும் உச்ச நீதி மன்றத்தை நாடினர். இந்த மனுக்கள் விசாரணையில் இருக்கும் போதுதான் 2011 ம் ஆண்டில் அப்போதய மத்திய சுற்றுப் புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காளைகளை விலங்குகளை காட்சிப்படுத்தும் பட்டியலில் சேர்த்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திர கோஷ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் மே 7, 2014 ல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின்படி ஜல்லிக்கட்டுக்கும், மஹாராஷ்டிராவில் நடத்தப்படும் காளைகள் பூட்டிய வண்டிகள் ஓடும் ரேக்ளா பந்தயத்துக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த தீர்ப்பு மூன்று முக்கியமான அம்சங்களை உள்ளடக்கி கொடுக்கப் பட்டிருக்கின்றது.
1. காளைகளை, விலங்குகளை பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்தக் கூடாதென்ற காட்சிப் பட்டியலில் அப்போதய - 2011 ம் ஆண்டு - மத்திய சுற்றுப் புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்திருந்ததற்கு எதிராக 2014 ம் ஆண்டில் மத்திய அமைச்சராக இதே துறையில் இருந்த வீரப்ப மொய்லி முடிவு செய்தார். இதற்கான உத்திரவைப் பிறப்பிக்கத் தயாராக இருப்பதாக இத்துறையின் சார்பு செயலர் கீதாஞ்சலி என்பவர் உச்ச நீதி மன்றத்தில் 2014 ம் ஆண்டில் தெரிவித்தார்.
ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. காளைகளைத் துன்புறுத்தக் கூடாதென்ற நோக்கத்தின்படி பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இந்திய விலங்குகள் நல வாரியம்தான் காளைகளை காட்சிப் பட்டியலில் சேர்க்க ஜெய்ராம் ரமேஷூக்கு சிபாரிசு செய்தது. ஆகவே விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துறையில்லாமல் நீங்கள் காளைகளை காட்சிப் பட்டியிலில் இருந்து நீக்கும் உத்திரவைப் பிறப்பிக்க முடியாது.
2. 2011 - 2014 ம் ஆண்டுகளில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டத்தின்படி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டதை பல வீடியோக்கள், புகைப்படங்கள் மூலமாக மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்திய விலங்குகள் நல வாரியம் நிறுவியுள்ளது. இது 1960 ம் ஆண்டு பிரிவு 11 ன் சட்டத்தின் கீழ் விலங்குகள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற முக்கியமான சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதாகவே கருதப்பட வேண்டும்.

3. ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய, கலாச்சார விளையாட்டு என்ற வாதம் நிராகரிக்கப் படுகிறது. காரணம், ஒரு சட்டத்திற்கும் - இந்த விவகாரத்தில் 1960 ம் ஆண்டு விலங்குகள் நலம் பேணும் சட்டம் - பாரம்பரிய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கும் இடையிலான மோதல், முரண்பாடு வருகிறதென்றால், அந்தக் குறிப்பிட்ட சட்டத்தின் மாட்சிமைப்படிதான் நாம் செயல்பட வேண்டும். ஆகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கிறோம்.
இதுதான் 2014 ம் ஆண்டு மே 7 ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கியமான சாராம்சம். காளைகளை, விலங்குகளைக் காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் ஜல்லிக்கட்டை நடத்தி விடலாம் என்று தமிழக பாஜக கொடுத்துக் கொண்டிருக்கும் உதார் எந்தளவுக்கு மோசடியானது என்பதை இதிலிருந்தே நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்த தீர்ப்பினை மறு பரீசீலனை செய்யக் கோரி தமிழ் நாடு அரசாங்கம் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கே வரவில்லை என்பதும் இங்கு நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது.
சரி. அப்படியென்றால் ஜல்லிக்கட்டை அவசர சட்டத்தினை போட்டு இந்தாண்டு நடத்தலாம் என்ற கோரிக்கை வருகிறதல்லவா? அதற்கு சாத்தியக் கூறுகள் உண்டா? இதற்கு பதில் இந்திய தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி யின் கருத்துத்தான். முகுல் ரோத்தகி மத்திய அரசாங்கத்துக்கு கொடுத்திருக்கும் சட்ட ஆலோசனையில் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டு வருவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானது என்று தெரிவித்திருக்கிறார். காரணம் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது என்கிறார் அவர்.
இதனை ஜனவரி 2 ம் தேதி வெளிவந்த ஹந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கின்றது. (http://www.hindustantimes.com/india/don-t-lift-jallikattu-ban-top-law-officer-tells-govt/story-B7TbY66humsUome0OGrqTM.html)
ஒருவேளை அவசர சட்டம் கொண்டு வந்தாலும் விலங்குகள் நல வாரியம் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்குத் தயாராகவே இருக்கின்றது. ‘சம்மந்தப்பட்ட அரசாங்கங்கள் நிதானமாக, சட்டத்தின்படி நடந்து கொள்ளுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மற்றபடி எங்களது அணுகுமுறை என்னவென்று, ஒருவேளை மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்பது பற்றி நான் இப்போது கருத்து கூற விரும்பவில்லை. அவசர சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் உடனடி தடை விதித்த முன்னுதாரங்கள் இந்தியாவில் உண்டென்பதை மட்டும் நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்' என்று இந்தக் கட்டுரையாளரிடம் தெரிவித்தார், இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா.
இப்போது புரிகிறதா, ஆரம்பத்தில் ஆவேசமாக பேசி வந்த தமிழ் நாட்டு பாஜக தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டை நடத்துவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக பேசி வருவதன் சூட்சுமம்!
ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் ஹிந்து விரோதிகள் என்ற கோஷத்தையும் சில பாஜக தலைவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக அமைச்சரும், குஜராத் பசு பாதுகாப்பு பவனத்தின் தலைவருமான டாக்டர் வல்லபாய் கத்தாரியா எந்த காரணத்தைக் கொண்டும் ஜல்லிக் கட்டை மத்திய அரசு அனுமதிக்க கூடாதென்றும் காரணம் இது காளைகளுக்குச் சொல்லொனா துன்பத்தைக் கொடுக்கிறதென்றும் மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். ஜல்லிக் கட்டுக்கு எதிரானவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்று குற்றஞ்சாட்டும் பாஜக வினர் டாக்டர் கத்தாரியாவின் கருத்துக்கான பதிலை தமிழக பாஜக வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா விடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
ஆகவே சட்டத்தின் நிலைமை இவ்வாறு தெளிவாக இருக்கையில் எதன் அடிப்படையில் தமிழ்நாடு பாஜக வினர் இந்தாண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களாக பேசி வந்தனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தற்போது நிலைமை சிக்கலாகி விட்டதால் சட்டத்தை துணைக்கு அழைக்கின்றனர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக வினர் மட்டுமல்ல, எல்லா கட்சிகளுமே, காங்கிரஸ், அஇஅதிமுக, பாமக, திமுக, இடதுசாரிகள் எல்லோருமே மக்களை தெரிந்தேதான் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகின்றது.
காரணம், இது தேர்தல் ஆண்டல்லவா? வானத்தை வில்லாக வளைப்பதாக வாய் சவடால் பேசும் அரசியல் கட்சிகளுக்கு ஜல்லிக்கட்டில் போலி வாக்குறுதிகள் கொடுப்பது எம்மாத்திரம்?












Click it and Unblock the Notifications