வளையலை உருவினாரா திமுக நிர்வாகி? உண்மையில் என்ன நடந்தது.. குன்னூர் கவுன்சிலர் விளக்கம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னுரில் திமுகவினர் அண்மையில் கையை நீட்டி இந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் என்பவர் அங்கிருந்த பெண் ஒருவரின் கையில் இருந்த வளையலை விளையாட்டுத்தனமாக கழற்றியதாக வீடியோ வெளியானது.இந்த விவகாரம் தொடர்பாக ஜாகிர் உசேன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
மும்மொழி கொள்கையுடன் கூடிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரக ஏற்க மறுத்துவிட்டது. அதேபோல் இந்தி மொழியை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறி வருகிறது.. அதேநேரம் மத்திய அரசோ, இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.. மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழி படித்தால் போதும் என்று தான் கூறி வருகிறோம் என்று விளக்கம் அளித்து வருகிறது. அதேநேரம் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றால், அது இந்தியில் தான் முடியும் என்றும் திமுக குற்றம் சாட்டி வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு, மத்தியில் உள்ள பாஜக அரசு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.. வட மாநிலங்களில் இந்தியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார். வடமாநிலங்களில் மற்ற மாநிலங்கள் அழிந்துள்ளததாகவும் கூறி வருகிறார்.
அதேநேரம் மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான மத்திய அரசோ, இந்தியை தாங்கள் திணிக்கவில்லை என்றும், சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்தி படிக்கும் போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை மட்டும் படிக்க விடாமல் தடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மொழியை வைத்து திமுக அரசியல் செய்வதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இரு தரப்புமே மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டங்களை திமுகவினர் பல்வேறு ஊர்களில் முன்னெடுத்து வருகிறார்கள். தபால் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழிப்பது, ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை கறுப்பு மை பூசி அழிப்பது போன்ற போராட்டங்களை திமுகவினர் கடந்த வாரம் மேற்கொண்டனர். தற்போது இந்தி எதிர்ப்புக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள்.
அப்படி நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுகவினர் அண்மையில் கையை நீட்டி இந்தி எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் என்பவர் அங்கிருந்த பெண் ஒருவரின் கையில் இருந்த வளையலை விளையாட்டுத்தனமாக கழற்றியதாக வீடியோ ஒன்று வெளியானது. அவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
வளையலை கழற்றிய போது, அவர் சிரித்துக் கொண்டே தட்டிவிடுவதாக வீடியோ பரவியது.
பொதுவெளியில் இந்த செயல் அநாகரிகம் என்று கூறி பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். பாஜகவினர் பலர் திமுகவை ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டி வீடியோவை பரப்பி ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வளையலை கழற்றியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளான குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி கவுன்சிலர் ஜாகிர் உசேன் கூறும் போது, "எனக்கு பின்னாடி இருந்த மகளிர் மறைக்கப்படுகிறார்கள்.. தெரியாமல் போகிறது.. அதனால் என்ன செய்தேன் என்றால், என்னுடைய சகோதரியை, அதாவது நகராட்சி மன்ற தலைவரை கையைப் பிடித்து வாங்க முன்னாடி என்று இழுத்துவிட்டேன்... இழுத்துவிட்ட காரணத்திற்காக.. அதை ஒரு சில தனியார் தொலைக்காட்சிகள் ட்ரோல் செய்து, தேவையில்லாத அவதூறுகளை பரப்பினார்கள்.. வளையலை திருடிய திமுக என்று அரசியல் ரீதியாக அவதூறு பரப்பினார்கள்.. " என்று குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications