வைகோவை விமர்சித்த நாஞ்சில் சம்பத்... விரும்பாத ஜெ....: அதிரடி நீக்கத்தின் பின்னணி இதானோ?
சென்னை: 'இழவு வீட்டில் களவு கூடாது' என்று டைமிங்கிற்கு ஏற்ப ரைமிங் ஆக பேசுபவர் நாஞ்சில் சம்பத். அவருடைய ரைமிங் பேச்சே இன்றைக்கு வினையாகிவிட்டது. தொலைக்காட்சி பேட்டியால்தான் நாஞ்சில் சம்பத்தின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை விமர்சித்தி பேசியதுதான் பதவி நீக்கத்திற்குக் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த போதே துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியோடு இன்னோவா காரையும் பரிசாக பெற்றார். அதிமுகவில் இணைந்ததில் இருந்தே வைகோவை விமர்சித்து பேசி வந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேற்றப்பட்ட போது அதிமுகவின் தோல்விக்கு பாடுபடுவோம் என்று சொன்னவர் நாஞ்சில் சம்பத். அதன்பின்னர் அதிமுகவில் இணைந்த பின்னர் மதிமுகவின் மீதும் வைகோவின் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். எனினும் ஜெயலலிதா ஒருபோதும் வைகோவிற்கு எதிரான மனநிலையில் அறிவிப்புகளை வெளியிட்டதில்லை.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் யாருடன் கூட்டணி என்றும் அறிவிக்கவில்லை. மக்கள் நலக்கூட்டணியின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதாக தெரிகிறது. எனவேதான் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.கவுடன் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக யாருடன் கூட்டணி என்று முடிவு செய்யப்படவில்லை இந்த நிலையில் மக்கள் நல கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணியில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் உள்ளனர். தற்போது வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் மக்கள் நல கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நல கூட்டணியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் பட்சத்தில் எளிதாக மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விட வாய்ப்புண்டு. அதனை கருத்தில் கொண்டே சூழலுக்கு ஏற்ப கூட்டணி என்ற அறிவிப்பை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் அளித்த டிவி பேட்டியில் மக்கள் நல கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார். மக்கள் நல கூட்டணி ஒரு வெத்து வேட்டு எனும்விதத்தில் மதிமுக தன்னால்தான் வளர்ச்சி பெற்றதாகவும் நாஞ்சில் சம்பத் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.

வைகோ மீதான விமர்சனம்
மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வைகோ. அவருக்கு கட்சினு ஒன்று தமிழ்நாட்டுல இருக்குதா?. அந்த கட்சியை ஊர் ஊராக சுமந்தவன் நான். அந்த கட்சிக்கு வானமும் சிறகுமாக இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்.கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்ற விபரம் வைகோவுக்கு தெரியாது. அந்த கட்சி தரை மட்டமாகி விட்டது தமிழ்நாட்டில் வரவில்லாத ஒரே கட்சி மதிமுகதான். சங்கரன்கோவிலில் அவரது சொந்த தொகுதியில், வைகோவை ஆதரித்து வீதி வீதியாக பேசியவன் நான். அங்கேயே கரை சேர முடியதவர் வைகோ '' என்றார்.

ரசிக்காத ஜெயலலிதா
வைகோவை மட்டுமல்ல மற்ற மக்கள் நல கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விடுதலைச் சிறுத்தை கட்சியையும் கூட நாஞ்சில் சம்பத் கடுமையாக தாக்கிப் பேசினார். சூழலுக்கு தக்க பேசுவோம், என்று அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், நாஞ்சில் மக்கள் நல கூட்டணித் தலைவர்களை கடுமையாக தாக்கி பேசியதை ஜெயலலிதா ரசிக்கவில்லை என்றும் அதனாலேயே நாஞ்சில் சம்பத்தை கட்சியை விட்டு நீக்கி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ டிவி பேட்டி நாசா எனப்படும் நாஞ்சில் சம்பத்தின் பதவியை காவு வாங்கிவிட்டது.

கட்சியின் எண்ண ஓட்டம்
ஒரு கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருப்பவர் கட்சித்தலைமையின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்கிறார் நாஞ்சில் சம்பத்தின் பதவி பறிப்பு பற்றி கருத்து கூறியுள்ள திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ் இளங்கோவன்.

ரொம்ப கஷ்டம்தான்
இதேபோல காங்கிரஸ் கட்சியின் கோபன்னா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகனும் நாஞ்சித் சம்பத் மீதான கட்சித்தலைமையின் நடவடிக்கை பற்றி கருத்து கூறியுள்ளனர். கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளராக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் முன்பு, கட்சியின் கொள்கைகள், தற்போதைய நிலைப்பாடு பற்றி தெளிவாக உணர்ந்த பின்னரே பேட்டியளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள அவர்கள், இது கடினமான பணிதான் என்று கூறியுள்ளனர்.
|
டாக்டர் ராமதாஸ் கமெண்ட்
அம்மாவை புகழ்ந்தால் பரவாயில்லை... புகழ்வது போல இகழ்ந்தால் விடுவார்களா? என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

மலைச்சாமி அடுத்து நாஞ்சில் சம்பத்
டிவி சேனலுக்கு பேட்டியளித்து பதவியிழந்து கட்சியிலிருந்தே நீக்கப்பட்டவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி மலைச்சாமி அதேபோல கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடுக்காத பேட்டிக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின் உண்மை நிலை அறிந்து சேர்த்துக்கொள்ளப்பட்டார் முன்னாள் டிஜிபி நட்ராஜ். இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத்தின் பதவி நீக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications