என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று16-ந் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.
தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த மூன்று வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, "செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் வாதங்களை எதிர்த்து வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை வரும் இன்று 16-ம் தேதி உச்ச நீதிமன்ற வெளியிட உள்ளது.
இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்டால் செந்தில் பாலாஜிக்கு எந்த சிக்கலும் அவருக்கு வராது. அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தால், செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு உடனடியாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செந்தில் பாலாஜி தரப்பில் மட்டும் இன்றி திமுக தரப்பிலும் உற்று நோக்கி கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications