ஓ பன்னீர்செல்வம் ஊரில் திமுக வெற்றி... திமுக வசமான பெரியகுளம் நகராட்சி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றியது மொத்தம் 30 வார்டுகளில், திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றியது மொத்தம் 30 வார்டுகளில், திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு குறைவான இடங்களே கிடைத்துள்ளது.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம். ஆரம்பகாலத்தில் அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் வகித்த பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியே அவருக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.
தமிழக முதல்வராக மூன்று முறையும், துணை முதல்வராக ஒரு முறையும், பல்வேறு துறைகளின் அமைச்சர் பொறுப்பு, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என அ.தி.மு.கவின் முக்கியத் தலைவராக உயர்ந்தவர், தற்போது அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உருவெடுத்துள்ளார்.

பெரியகுளம் நகராட்சி திமுக வசம்
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் 129 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 13,536 ஆண்கள்,14,551 பெண்கள் என மொத்தம் 28,087 வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இந்த ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக அமைந்தன.

திமுக கைப்பற்றியது
பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றி அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அங்கு மொத்தம் 30 வார்டுகளில், திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு குறைவான இடங்களே கிடைத்துள்ளது. அதிமுகவின் அசைக்கமுடியாத கோட்டைகள் என கருதப்பட்ட இடங்கள் அனைத்தும் திமுக வசமாகி வருகின்றன.

1996ல் நகராட்சி சேர்மனாக வென்ற ஓபிஎஸ்
கடந்த 1996ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான அலை வீசியபோது கூட அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றபோதும், தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சேர்மனாக வெற்றிபெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிவருகிறார்.

ஓபிஎஸ் தம்பி
அவரைத் தொடர்ந்து அவரின் இளைய சகோதரரான ஓ.ராஜாவும் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்று அரசியலில் தனது இருப்பைப் பதிவுசெய்தார். பின்னர் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ஆவின் தலைவராக இருந்தவர், தற்போதைய தேனி ஆவின் தலைவராகவும் பதவி வகித்துவருகிறார். இதனால், தமிழகத்தில் பெரியகுளம் நகராட்சி மிகவும் கவனிக்கத்தக்க நகராட்சியாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

அதிமுகவினர் அதிர்ச்சி
இந்த நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் மூன்றாவது சகோதரர் ஓ.சண்முகசுந்தரம் போட்டியிட்டார்.
தற்போது நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவிடம் பெரியகுளம் நகராட்சியை பறிகொடுத்ததால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போடி குச்சனூர் வாஷ் அவுட்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர்- குச்சனூர் பேரூராட்சியில் ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுகவும் ஒரு வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றது.

ஆளும்கட்சியாக இருந்த போதே வெற்றி
கடந்த 2019ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 16 வார்டுகளில் திமுக.8 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக மற்றும் அமமுக தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில் தேமுதிக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் பாக்கியம், மருதையம்மாள் ஆகியோர் ஆதரவுடன் திமுக.கவுன்சிலர் தங்கவேல் தலைவராக வெற்றி பெற்றார். அதிமுக ஆளும்கட்சியாக இருந்த போரே ஓபிஎஸ் ஊரில் திமுக வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications