கொடைக்கானல் மலை கிராமத்தில் திடீரென 200 அடிக்கு பள்ளம்! எட்டி பார்த்தால்.. ஆனைமலையால் மக்கள் பீதி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிளாவரை கிராமத்தில் திடீரென 200 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதனால் ஏற்பட்ட பள்ளம் என தெரியவில்லை.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் மலை உள்ளது. இந்த மலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகிறார்கள்.

இவற்றில் மேல்மலையில் அமைந்துள்ள அழகான கிராமம்தான் கிளாவரை. சுற்றி டீ எஸ்டேட். நடுவே கிராமம் என ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த கிராமத்தையொட்டி செருப்பான் ஓடை வனப்பகுதி, ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்குள் அமைந்துள்ளது.
கிளாவரை கிராமத்தில் இருந்து செருப்பான் ஓடை செல்லும் காட்டு பகுதி உள்ளது. இங்குதான் சாலையில் 200 அடி நீளத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டது. அதன் அகலம் 2 அடி வரை இருந்தது. காட்டு வழியாக தங்கள் வீடுகளுக்கும் பணிகளுக்கும் சென்ற கிராம மக்கள் இந்த பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் சிவராமனிடம் புதிய தலைமுறை தொலைகாட்சி சார்பில் கேட்ட போது, இந்த பள்ளத்தை பார்த்து அச்சப்பட தேவையில்லை. பூமியில் பிளவு ஏற்பட்டுள்ள செருப்பான் ஓடை வனப்பகுதி, மிகச் சரியாக இரண்டு மலைகள் இணையும் பகுதியில் இருக்கிறது.
மேலும் பூமிக்கு அடியில் இருப்பது சதம்பல் நிலப்பகுதி. அதாவது சதம்பல் என்றால் ஈரநிலம் என்பது பொருள். இந்த செருப்பான் ஓடையில் மண்ணுக்குக் கீழே சதம்பலாக அமைந்துள்ளது. நீர் வழிப் பாதையில் சதம்பலுக்கு மேலே மலைச் சரிவுகளில் இப்படியான பிளவுகள் ஏற்படுவது இயல்புதான் என பழங்குடியின மக்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் 900 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். ஏற்கெனவே வனத்துறையினரும் இது போன்ற ஒரு வெடிப்பை 3 மாதங்களுக்கு முன்னர் பார்த்தனர். எனவே வயநாடு போல் நிலச்சரிவு ஏற்படுமா என்ற அச்சம் தேவையில்லை. வயநாட்டில் நீர் இடி எனப்படும் நிலவியல் பாதிப்பால் நிலச்சரிவு ஏற்பட்டது. அது போன்றதொரு பாதிப்பு கொடைக்கானலில் ஏற்படாது என்றார்.












Click it and Unblock the Notifications