ஸ்ரீரங்கம் தேர்தல் புறக்கணிப்பால் தி.மு.க. உறவில் எந்த பாதிப்பும் இல்லை: தொல். திருமாவளவன்
ராமநாதபுரம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தராமல் புறக்கணித்திருப்பதால் தி.மு.க. உடனான உறவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருந்தது. தி.மு.க. உருவாக்கிய டெசோ இயக்கத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது.
ஆனால் ஸ்ரீரங்கம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. தங்களிடம் ஆதரவு கேட்கவில்லை; அதனால் தேர்தலில் போட்டியிடவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை என்று புறக்கணிப்பு செய்வதாக திருமாவளவன் அறிவித்திருந்தார்.

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவற்றுடன் இணைந்து திருமாவளவன் புதிய அணியை உருவாக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையால் பதற்றம் அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் சங்பரிவார் அமைப்புகளின் மனிதநேயமற்ற தாக்குதல் நடந்து வருகிறது.
ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற எண்ணம் ஏற்படும் வகையிலான இந்த போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் மதசார்பற்ற ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற 26 அல்லது 28-ந்தேதியில் சென்னையில் மாபெரும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
மதநல்லிணக்கத்தை காப்பாற்ற தேசத்தில் அமைதியை நிலைநாட்ட இந்த கூட்டத்தில் மதசார்பற்ற கட்சிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். பிரதமர் மோடி, சங்பரி வார் அமைப்புகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனது பதவி பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பான கலந்தாய்வு கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது வரவேற்கத்தக்கது.
இடைத்தேர்தலுக்கு என்று தனியாக தேர்தல் ஆணையம் புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும்கட்சியினரின் அத்துமீறல் நடவடிக்கை மேலோங்கி உள்ளது.
தேர்தல் ஆணையம் தேர்தலை மட்டும் நடத்தும் வலிமை பெற்றுள்ளதே தவிர முறைகேடுகளை, ஊழலை ஒழிக்கும் வலிமை பெறவில்லை. மோசமான முறைகேடுகள் நடக்கும் தேர்தல் களமாக தமிழகம் திகழ்கிறது.
இதனை சரிசெய்ய தேர்தல் ஆணையம் புதிய வரைமுறைகள் உருவாக்க வேண்டும்.
அமைச்சர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரவேண்டும். ஆளும்கட்சியினர் இடைத்தேர்தலில் செய்யும் அத்துமீறலை தடுக்க புதிய சட்டம் கொண்டுவர கோரி நாங்கள் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை புறக்கணித்து உள்ளோம்.
இதனால் தி.மு.க. உடனான எங்களின் உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தி.மு.க. எங்களிடம் ஆதரவு கோரவில்லை. அதனால் எந்த கசப்பும் எங்களுக்கு ஏற்படவில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வி.சி.க. சாதிச் சங்கம் அல்ல- அரசியல் கட்சி
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
சாதி ஒழிப்பு, பாட்டாளி வர்க்கங்களின் விடுதலை.மகளிர் விடுதலை, தேசிய இன உரிமையின் மூலம் தமிழ் தேசியத்தை வளர்ப்போம், ஏகாதிபத்தியத்தை ஒழிப்போம் இந்த 5 கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி.
ஒரு மொழி பேசும் சமூகமாக இந்திய சமூகத்தை ஆக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கம், சிந்தனை. சிறுபான்மை மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று கூடக்கூடாது என்பது பிறரின் கருத்து. அதிகாரத்தில் தொடர்புடையவர்கள் சாதி கலவரத்தை தூண்டுகின்றனர்.
எங்களிடம் ராமதாசை போல சாதி வெறி அரசியல் கிடையாது. நரேந்திர மோடியை போல் வெறும் மதவெறி அரசியல் கிடையாது. சமூகநல்லிணக்கத்தை விரும்புகிறோம். என்னுடைய நோக்கம் புனிதமானது, திடமானது, நேர்மையானது, நியாமானது என்பதை புரிந்து கொண்டனர்.
இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் நல்லிணக்க நட்சத்திரம் என்ற விருதை வெளிநாட்டுக்கு வரவழைத்து எனக்கு வழங்குகின்றனர்.
இந்த பாதையில் எப்போதும் வழி தவற மாட்டோம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது தற்காலிகமானது. ஆட்சி, அதிகாரம் நமது இலக்கு அதற்காக அடுத்த முதல்வர் திருமாவளவன் என முழக்கமிட சொல்லவில்லை. அது ராமதாசின் கனவாக இருக்கட்டும்.
ஆளுங்கட்சிக்கு பணி செய்வதற்கு போலீசார் சீருடை அணிந்துள்ளனர். ஆகவே போலீசார் மீது நாம் தனிப்பட்ட முறையில் கோபப்படவேண்டிய அவசியம் இல்லை. நமது சமூகத்திலும் சாதி உணர்வு உள்ளவர்கள் அதிகம் பேர் உள்ளனர். விடுதலை சிறுத்தை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கம். இது சாதி சங்கம் கிடையாது. அரசியல் கட்சி என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மண்டல் கமிஷன் பரிந்துரையில் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்தபோது முஸ்லிம்களும். கிறிஸ்தவர்களும். தலித்துகளும் ஆதரித்தனர். அதை கொடுக் கக்கூடாது என எதிர்த்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
இது ராமதாசுக்கு தெரியாதா? பண்பாட்டை சிதைப்பவர்கள் நாங்கள் கிடையாது.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications