இலங்கைதமிழர் பிரச்சனை.. பன்னாட்டு விசாரணை தேவை.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திருமா கோரிக்கை
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பன்னாட்டு விசாரணை தேவை என்று திருமாவளவன் கோரியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவை என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் வரலாற்று பதிவு. அவரைப் பின்பற்றி தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதுதொடர்பான தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து பேசவும் தயாராக உள்ளோம். இதனை வலியுறுத்தும் வகையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். போராட்ட எப்போது நடைபெறும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த போராட்டத்தில் பங்கேற்றும் கட்சிகள் அனைத்தும், ஒரு கட்சி ஒரு நாளைக்கு என்ற அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னாள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.
மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
