தலைவரான உடனேயே அதிரடியில் இறங்கிய திருநாவுக்கரசர்... அவரச கூட்டத்திற்கு மூத்த தலைவர்களுக்கு அழைப்பு
சென்னை: நான்கு மாதங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டார். தலைவராக அறிவிக்கப்பட்ட உடனே ஆலோசனையில் இறங்கிய திருநாவுக்கரசர், சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட பிரதிநிதிகள், மூத்த தலைவர்கள் முக்கிய மூத்தத் தலைவர்களை அழைத்து நாளை மிகமுக்கிய கூட்டம் போட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்புகளையும் மீறி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொறுப்பு அவருக்கு இருக்கும் நிலையில், காங்கிரஸில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம், குஷ்பு உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சித்தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் எட்டு எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றனர். இந்த படுதோல்விக்குக் காரணமே இளங்கோவனின் செயல்பாடுகள்தான் என்று டெல்லி தலைமையிடம் கோஷ்டித்தலைவர்கள் போட்டுக்கொடுக்கவே, நேரடியாகவே, இளங்கோவனை அழைத்து கண்டித்தார் ராகுல் காந்தி. இதுபற்றி சோனியாவிடம் விளக்கம் அளிப்பதற்காக, அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதற்கு மேலும் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து பலரும் அந்தப் பதவியை கைப்பற்றத் துடித்தனர். இதற்காக எல்லோரும் மாறி மாறி டெல்லிக்குப் போனார்கள். பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பலரும் போட்டியில் இருந்தனர். அதில் சிலரை மட்டும் ராகுல் காந்தி சந்தித்தார். அப்படி டெல்லிக்குப் போனவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டநிலையில், திருநாவுக்கரசர் மட்டும் டெல்லியிலேயே தங்கியிருந்தார்.
நீங்க இப்போ சென்னை கிளம்ப வேண்டாம். நான் சொல்லும் வரைக்கும் வெய்ட் பண்ணுங்க என்று கூறினாராம் ராகுல்காந்தி. டெல்லிக்குப் போனவர்களை எல்லாம் எதுவும் சொல்லாமல், திருநாவுக்கரசரை மட்டும் டெல்லியிலேயே ராகுல் இருக்கச் சொல்லியிருக்கிறார் என்றால் கட்சித்தலைவர் பதவி அவருக்குத்தான் என்று அப்போதே பேச்சு கிளம்பியது. இப்போது அதனை உறுதிபடுத்தும் விதமாக தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி நேற்று அறிவித்தார்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியான நிலையில் இருந்தன. 41 மாவட்ட தலைவர்கள் இளங்கோவன் பக்கம் உள்ளனர். அவர்கள் எந்த ஒத்துழைப்பையும் புதிய தலைவருக்கு அளிக்க மாட்டார்கள்' எனவும் சொன்னார்கள். புதிய தலைவரை நியமிப்பதற்காக முதலில் ஒன்பது பேரிடம் நேர்காணல் நடத்தினார் ராகுல் காந்தி. ' தமிழ்நாட்டின் சூழல் எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்க முடியும்? மக்கள் மனநிலை என்ன?' என்பது பற்றித்தான் பல கேள்விகளைக் கேட்டார். அதன்பிறகும், நான்கு பேரிடம் நேர்காணல் நடத்தினார்.
தேர்வு செய்த ராகுல்காந்தி
தலைவர் பதவிக்கு யார் பொருத்தமானவர்?' என்ற கேள்விக்கு பலரும் விதவிதமான பதில்களைத் தந்தார்கள். அவை அனைத்துமே கோஷ்டியை மையமாக வைத்திருந்தன. திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு வந்தபோதும், ' காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர்கள் எல்லாம், கட்சியை வளர்த்துவிட்டார்களா?' எனக் கோபப்பட்டார் ராகுல். அவருடைய முந்தைய செயல்பாடுகள், அரசியல் களத்தில் கையாண்ட அணுகுமுறைகள் போன்றவற்றை கவனித்து வந்திருக்கிறார். அதன்பிறகே தலைவராக திருநாவுக்கரசரை டிக் செய்துள்ளார் ராகுல்காந்தி என்கின்றனர்.
ஆலோசனையில் இறங்கிய திருநாவுக்கரசர்
தமிழ்நாட்டு அரசியலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவார் என்று நம்பித்தான் அவரிடம் பொறுப்பு அளித்திருக்கிறார் ராகுல். டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்போது திருநாவுக்கரசர் சென்னையில்தான் இருந்தார். இன்று அறிவிப்புவரும் என்ற தகவலும் திருநாவுக்கரசருக்கு இன்று காலையிலேயே சொல்லப்பட்டுவிட்டதாம். அதை எதிர்பார்த்துதான் அவரும் சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தார் திருநாவுக்கரசர் பொறுப்பேற்றுக் கொண்டதும் காவிரி பிரச்னையையும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் தொடர்பாகவும் கட்சியின் மூத்தத் தலைவர்களோடு ஆலோசனை நடத்தினார்.
நாளை தெரியும்
தமிழகம், கர்நாடகத்தில் நிலவும் காவிரி தொடர்பான சூழலை விவாதிக்கவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும் அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தையும் நாளை 16ஆம் தேதி மாலை மூன்று மணிக்கு கூட்ட, அழைப்பு விடுத்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு மாவட்ட பிரதிநிதிகளுக்கும், முக்கிய மூத்தத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசரக்கூட்டத்துக்கு அனைத்துத் தலைவர்களும் வர வேண்டும் என்று திருநாவுக்கரசர் விடுத்திருக்கும் அழைப்புக்கு பலன் இருக்குமா என்பது நாளை தெரியும்.












Click it and Unblock the Notifications