3 கண்டெய்னர்கள்.. கட்டுக் கட்டாக ரூ. 570 கோடி.. திமுகவின் புகார் இதுதான்!
சென்னை: 3 கண்டெய்னர்களில் ரூ. 570 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் திமுக போட்ட வழக்கில்தான் இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்குப் போயுள்ளது. மேலும் இந்த விசாரணையில் அத்தனை உண்மைகளும் அம்பலமாகும், பலரின் பொய் புரட்டு வெளிச்சத்திற்கு வரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல் அம்பலமாக லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என்ற விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி திமுக ராஜ்யசபா எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் அவர் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவரித்திருந்தார். சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக் கொண்டு வர உதவும் என்றும் அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

டிகேஎஸ் இளங்கோவன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்த விவரம் இதுதான்...
- தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் திருப்பூர் அருகே கைப்பற்றப்பட்டது.
- மாவட்ட ஆட்சியரும், காவல் துறை அதிகாரிகளும் நடத்திய விசாரணையில் ரூ. 570 கோடி பணம் தொடர்பான எந்த ஆவணங்களும் லாரி ஓட்டுநர்களிடம் இல்லை.
- 3 லாரிகளிலும் வந்த ஆந்திர மாநில பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்குரிய சீருடையில் இல்லை.
- பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கரூவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
- இவ்வளவு பெரிய பணம் பிடிபட்டு 18 மணி நேரத்துக்குப் பிறகே எஸ்பிஐ சில ஆவணங்களை வழங்கியது.
- ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ரூ. 570 கோடி எடுத்துச் செல்லப்பட்டதாக எஸ்பிஐ கடிதம் அளித்துள்ளது.
- இந்த அளவு பெரும் தொகையை கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி வாய்மொழி உத்தரவு வழங்காது. இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சாலை வழியாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பெரும் தொகையை எப்படி அனுப்ப முடியும்?
- வழக்கமாக இதுபோன்ற பெரும் தொகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயில் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.
- பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரூ. 570 கோடி பணம் தங்களுடையது என எஸ்பிஐ ஏற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- எங்களுக்கு கிடைத்த தகவலின்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து 8 கண்டெய்னர் லாரிகளில் பணம் ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
- அதில் 3 லாரிகள் மட்டும் திருப்பூர் அருகே பிடிபட்டுள்ளதாக அறிகிறோம்.
- இந்தப் பணம் எஸ்பிஐக்கு சொந்தமானது என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நியப்படுத்தியுள்ளார்.
- ஆனாலும் ரூ. 570 கோடிக்கு உண்மையான உரிமையாளர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- அண்மையில் கரூரில் அன்புநாதன் என்பவரின் வீட்டிலிருந்து பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
- எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
தற்போது சிபிஐ தொடங்கியுள்ள விசாரணையில் என்னென்ன குண்டுகள் வெடிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் மக்களும், கட்சிகளும் உள்ளன.












Click it and Unblock the Notifications