For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழப்பம் விஜயகாந்திடம் இல்லை...!

By Shankar
Google Oneindia Tamil News

-எஸ் ஷங்கர்

விஜயகாந்தெல்லாம் ஒரு தலைவரா... அவருக்கு அரசியல் தெரியவில்லை... குறைந்தபட்ச கொள்கையோ லட்சியமோ இல்லாத அரசியல் வியாபாரி... சரியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்... அவர் கட்சியோடு கூட்டணி வைப்பது அவமானம்...

-இப்படியெல்லாம் பலரும் வெறுப்பைக் கக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. கட்சித் தலைவர்கள் சிலரும்கூட இப்படி கமெண்ட் அடித்தபடி, தேமுதிக வாசலை நோக்கிக் கொண்டிருப்பதையும் கவனிக்க முடிகிறது.

இதுதான் விஜயகாந்தின் வெற்றி.

This is Vijayakanth's politics!

இந்தத் தேர்தலைப் பொருத்தவரை விஜயகாந்த் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார். இத்தனைக்கும் கடந்த தேர்தலின் போது இருந்த அளவுக்குக் கூட அவருக்கு வாக்கு பலமில்லை. தனிப்பட்ட இமேஜும் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகியிருக்கிறது. ஆனால் அவரது கூட்டணி தயவுக்காக அதிமுக தவிர்த்து, அத்தனைக் கட்சிகளும் காத்திருக்கின்றன. குறைந்தபட்சம், 'அடுத்து விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்?' என்ற கேள்வியோடு காத்திருக்கின்றனர்.

தேர்தல் கூட்டணிக்கு வாங்க என்று அவர் யாரையும் அழைக்கவே இல்லை. மக்கள் நலக் கூட்டணியை ஆரம்பித்த கையோடு அந்த அணித் தலைவர்கள் தாங்களாகவே கோயம்பேடு போய் விஜயகாந்தைச் சந்தித்தார்கள். கூட்டணிக்கு வரக் கூப்பிட்டார்கள். அதிக சீட், முதல்வர் வேட்பாளர் என்கிற வரை இறங்கியடித்தும் விஜயகாந்த் ஒன்றும் சொல்லாமல் அனுப்பிவிட்டார்.

இந்தப் பக்கம் பாஜக. அவர்களும் தலையால் தண்ணீர் குடித்துப் பார்க்கிறார்கள். ஜவடேகர் என்றொரு அமைச்சர், சோறு தண்ணி இல்லாமல் டெல்லிக்கும் கோயம்பேட்டுக்கும் நடையாய் நடக்கிறார். விஜயகாந்த் கார் எந்த தெரு வழியாகப் போகிறது என்று ஆள் வைத்துப் பார்த்து, அங்கே வந்து மடக்கிப் பேசும் அளவுக்குப் போய்விட்டார்கள். தமிழிசை நாளும் ஒரு கெஞ்சல், கொஞ்சல், வீராப்பு அறிக்கைகளை விஜயகாந்துக்கு எதிராக விட்டுப் பார்க்கிறார். ம்ஹூம். விஜயகாந்த் இவர்கள் விஷயத்தில் கல்லுளி மங்கன்தான்!

பாமகவோ, மாற்றம் முன்னேற்றம் என அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முந்திக் கொண்டு அறிவித்துவிட்டு, கூட ஒரு லெட்டர் பேட் கட்சி கூட வராத விரக்தியில் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது.

இவர்களாவது பரவாயில்லை. ஏற்கெனவே ஒரு முறை ஒன்றாகக் கைகோர்த்து தோற்ற அனுபவசாலிகள்.

ஆனால்... அரசியலில் நெடிய வரலாற்றைக் கொண்ட, திராவிடப் பேரியக்கம் என்ற மாண்புமிக்க, ஒரு சாணக்கியனின் தலைமையில் இயங்கும் பெரிய கட்சி என்ற பிம்பத்தைக் கொண்ட திமுக, வருந்தி வருந்தி விஜயகாந்தை பால் பழமெல்லாம் வைத்துக் கொண்டு விருந்துக்கு அழைக்கிறது. அவரோ, 'உன் சங்காத்தமே வேண்டாம்.. நீ தில்லுமுல்லு பார்ட்டி' என்கிற ரேஞ்சில் திட்டிக் கொண்டிருக்கிறார்.

'இதோ.. இன்னிக்குதான் கடைசி... கூட்டணிக்கு வரலேன்னா கதவைச் சாத்திடுவோம்... கெடு முடிஞ்சிடும்... பாத்துக்க... உனக்குத்தான் ஆபத்து... சொன்னா கேளு.. வாய்யா.. வந்துடுய்யா ராசா..' என எத்தனையோ ஆசை வார்த்தைகள் காட்டியும் விஜயகாந்த் இன்னும் அமைதியாகவே இருக்கிறார்.

இதெல்லாம் ஒரு அரசியலா... நாகரீகமா? என்று விரக்தியில் கேட்கிறார்கள் உடனே.

அவருக்குத் தெரிந்த அரசியல் நாகரீகம் அதுதான். உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லவா.. உங்கள் வழியில் பயணித்து அவருக்கு ஒரு பாடம் புகட்டலாமே. எதற்காக அவரை இழுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். இன்னும் 50 நாட்கள்தான். ஒவ்வொரு கட்சியும் பார்க்க வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கும். அதைக் கவனிக்காமல் விஜயகாந்த் வீட்டு வாசலையே வெறித்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமா?

அடுத்தது மீடியா.... விஜயகாந்த் தூ எனத் துப்பியும்கூட தன் போக்கை மாற்றிக் கொள்ளாத மீடியா. யாருடனும் கூட்டணி இல்லை. தனி வழியில் போகிறேன் என ஊரைக் கூட்டிச் சொல்லிவிட்டார் அவர். அப்படியே விட வேண்டியதுதானே. மீண்டும் அவர் யாருடன் கூட்டணி வைப்பார்? எனக் கேட்டு அவரை அடிக்கடி துப்ப வைப்பது ஏன்?

தனி வழிதான் என்று சொன்ன அவர், திடீரென வேறு கட்சியுடன் கூட்டணி வைத்தால், 'ஏன் இப்படி மாறினீர்கள்? இதென்ன அரசியல்? பச்சையா வியாபாரம் செய்கிறீர்களே?' என்றெல்லாம் கேட்கவாவது ஒரு வாய்ப்பிருக்கும். ஆனால் அவர் ஒரு முடிவை அறிவித்த பிறகு, 'மீண்டும் திமுகவுடன் கூட்டணியா? மநகூ பக்கம் போகிறீர்களா? தனித்து நின்றால் தோல்வி நிச்சயமாச்சே... யாருடனாவது சேரலாமே?' என அவரை யாரோ ஒருவருடன் இணைக்க தரகு வேலைப் பார்ப்பது ஏன்? நாளையே அவர் வேறு கூட்டணிக்குப் போகும்போது எதிர்ப்படும் மீடியாவைப் பார்த்து, 'ஆமாய்யா.. உங்க அனத்தல் தாங்கல. அதான் இந்த அணிக்கு வந்தேன்' என்று சொல்லக் கூடியவர்தான் விஜயகாந்த்.

ஆக.. அவர் தெளிவாக இருக்கிறார். தன் முடிவை மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டு, வேடிக்கைப் பார்க்கிறார். அவரைப் பின் தொடர்வதையே பிழைப்பாகக் கொண்ட அத்தனைப் பேரும் அவமானப்பட்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச வெற்றி வாய்ப்பையும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

அரசியலில் தன்னை வியாபாரி என வர்ணித்த அத்தனைப் பேரும் தன்னுடன் சேரத் துடிக்கும் சக வியாபாரிகளே.. இதில் கொள்கையாவது வெங்காயமாவது என்பதை தெளிவாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்!

English summary
Why all the parties and media running behind Vijayakanth, even after he announced his alliance stand? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X