பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அதிகாரி... தூத்துக்குடி பொது விநியோக ஊழியர்கள் தர்ணா
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண் விற்பனையாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அதிகாரியைக் கண்டித்து, பொது வினியோக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ரேசன் கடை உள்ளது. அங்கு பணியாற்றும் மகளிர் விற்பனையாளர் ஒருவரிடம், திருச்செந்தூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட திருச்செந்தூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பிரதான சாலையோரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் தாலுகாக்கள் வாரியாக உள்ள பொதுவிநியோக ஊழியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் துணை பதிவாளரை கண்டித்து கோஷம் எழுப்பினர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
துணை பதிவாளர் மீது எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியதால் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications