திருப்பத்தூரில் மகிழ்ச்சி.. போயி 1 வாரம்கூட ஆகல.. அதுக்குள்ள ஆபீசர்களை அலறவிட்டு.. யார் அந்த "ஹீரோ"?
திருப்பத்தூர்: திருப்பத்தூருக்கு போயி ஒரு வாரம்கூட ஆகல.. அதுக்குள்ளேயே அதிகாரிகளை அலறவிட்டு, அதிரடியை கிளப்பி கொண்டிருக்கிறார் மாவட்ட கலெக்டர்.
தமிழக உயர் கல்வித்துறை துணைச்செயலாளராக பணியாற்றி கொண்டிருந்தவர் தர்ப்பகராஜ்.. கடந்த மாதம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்... இதையடுத்து, கடந்த 29-ம் தேதி, கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதிரடிகள்: டியூட்டியில் ஜாயின் செய்த தினத்திலிருந்தே பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார் கலெக்டர். பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு திடீர் திடீர்னு சத்தமேயில்லாமல் போய் நிக்கிறாராம்.. அந்தந்த அலுவலகங்களில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.. அதுமட்டுமல்ல, அங்கிருக்கும் மக்களை நேரடியாகவே சந்தித்து, அவர்களது குறைகளையும் கேட்டு, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு வருகிறாராம்.
இப்படித்தான், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வந்திருந்தார்.. அப்போது திருப்பத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும், பல்வேறு கோரிக்கைகளை கையில் வைத்து கொண்டு, வட்டாட்சியர் அலுவலகம் வெளியே காத்திருந்தனர். அதில் ஒரு தாத்தாவும், கையில் மனுவுடன் நின்றுகொண்டிருந்தார்.. அவரை அழைத்த கலெக்டர், எதுக்காக வந்திருக்கீங்க? என்று கேட்டார்..
தாத்தா மனு: அதற்கு அந்த தாத்தா, "நான் நெல்லிவாசல் நாடு பகுதியில் வசித்து வருகிறேன், 6 மாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன்.. ஆனாலும் இதுவரை என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை" என்றார்.
இதைக்கேட்டதுமே கலெக்டருக்கு கோபம் வந்துவிட்டது.. அதனால், அருகிலிருந்த திருப்பத்துர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணனை பார்த்து, "கோ இன் சைடு" என்றாராம்.. பிறகு, அந்த முதியவரின் மனுவை எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்றும் உத்தரவிட்டாராம்.
இதுபோலவே, வட்டாட்சியர் அலுவலகம் வெளியே வரிசையாக நின்று கொண்டிருந்த, அனைத்து மனுதாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார் கலெக்டர்..
மனுதாரர்கள்: அப்போது மனுதாரர்கள் எல்லாருமே, அந்த தாத்தா சொன்னதை போலவே சொன்னார்களாம்.. பல மாதங்களாக இங்கே வந்துபோயிட்டு இருக்கோம். ஆனால், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று முறையிட்டிருக்கிறார்கள். இதையடுத்து, அனைவரது மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வருவாய் கோட்டாட்சியர் பானு மற்றும் தாசில்தார் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டாராம் கலெக்டர்..
கடந்த 5-ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடந்துள்ளது.. அப்போது ஒரு மாணவி, தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை மற்றும் சக்கர நாற்காலி வேண்டுமென்று கேட்டு மனுவுடன் வந்திருந்தார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அடுத்த 10 நிமிஷத்திலேயே மாணவிக்கு சக்கர நாற்காலி வழங்கினாராம்..
ஹாஸ்டல்: அதேபோல், திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மனு அளித்த அன்றே, அவருக்கு அரசு விடுதியில் இடம் ஒதுக்கவும், துணிகளை வாங்கித்தரவும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாராம் தர்ப்பகராஜ்.
பொறுப்பேற்று கொஞ்ச நாளிலேயே, ஆய்வுகள் மேற்கொள்வதும், பொதுமக்களின் மனுக்களை பரிசீலிப்பதும் என பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறாராம் திருப்பத்தூர் கலெக்டர்.. இது மாவட்ட மக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications