தமாகாவை தேமுதிக- ம.ந.கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது- திருமாவளன்
சென்னை: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இணைந்தால் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதற்காக ஜி.கே. வாசனுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேரும் முடிவில் ஆரம்பம் முதலே இருந்தது. இந்த சூழலில், ஆரம்பத்தில் தமாகா கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை தர அதிமுக தரப்பு மறுத்தது. ஒரு கட்டத்தில் தொகுதிகளை குறைத்துக் கொடுத்தாலும் பரவாயில்லை அதிமுகவுடன் இணைவது என்று தமாகா தரப்பு முடிவெடுத்தது.

கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் போதே இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட வேண்டும் என்று அதிமுக தரப்பில் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், இதனால் பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பம் முதலே வெற்றிக்கூட்டணியில் இணைவோம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறி வந்தார். இந்த நிலையில் அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், திமுகவுடன் கூட்டணி சேர வேண்டுமென்று தமாகா இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜி.கே.வாசனை வலியுறுத்தினர். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை.
இந்த சூழலில், ம.ந.கூட்டணி தேமுதிக அணியை தனது அடுத்த தேர்வாக ஜி.கே.வாசன் வைத்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை ஜி.கே.வாசனை சந்தித்து பேசினார்.
இதுபற்றிய தகவல்களை விஜயகாந்திடம் வைகோ நேற்று தெரிவித்துள்ளார். மேலும், தமாகாவின் 2ம் கட்ட தலைவர்கள் தேமுதிகவுடன் பேசினர் எனவே, அதிமுகவோடு கூட்டணி அமையாத பட்சத்தில் தேமுதிக - ம.ந.கூட்டணியில் தான் தமாகா இணையும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் , தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி இணைய வாய்ப்பு உள்ளது என்றார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறிய திருமாவளவன், தமாகா, இணையும் பட்சத்தில் அவர்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறினார்.
நாளை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டணித்தில் மக்கள் நலக்கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்களும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இணைந்து பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர்.
இந்த மாநாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் திருமாவளவன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால் ஜி.கே.வாசனும் மாமண்டூர் மாநாட்டில் பங்கேற்பார் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications