ஜெயலலிதா அவதூறு கட்டுரைக்கு கண்டனம்: தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
சென்னை: இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி அவதூறு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அருகில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்த முடையவை என்ற தலைப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் கடந்த 1-ம் தேதி கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் சித்திரமும் இடம்பெற்றிருந்தன.
இந்த கட்டுரை ஜெயலலிதாவையும் மோடியையும் இழிவு செய்வதாக இருந்தது. இதற்கு இந்தியாவில் பலத்த கண்டனம் எழுந்ததால் பாதுகாப்பு அமைச்சகம், இணைய தளத்திலிருந்து அந்த கட்டுரையை உடனடியாக நீக்கியது. இந்தியாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியது.
பிரதமரிடமும் தமிழக முதல்வரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை தெரிவித்தது. இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அ.அஸ்மதுல்லா, முதன்மை நிலைய செயலாளர் கா.ஜாகிர் ஹூசைன், மாநில இளைஞர் அணி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, மாநில தொழிலாளர் பிரிவு தலைவர் ஏ.ஈ.பாட்ஷா, கொள்கை பரப்பு செயலாளர் கே.எஸ்.ஆசாத் யூசூபி உள்பட முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும், மகளிரணியினரும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கை தூதரகத்தை இழுத்து மூட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications