ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை - ஆளுநரிடம் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் காங். தலைவர்கள் மனு!!
சென்னை: தமிழகத்தில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் தலைமையில் அக்கட்சித் தலைவர்கள் இன்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து மனு அளித்தனர். இச்சந்திப்பின் போது திருநாவுக்கரசர், மணிசங்கர் ஐயர், குஷ்பு உள்ளிட்ட 21 காங்கிரஸ் தலைவர்கள் உடன் இருந்தனர்.
தமிழக அரசில் நடக்கும் முறைகேடுகள், ஊழல் குறித்தும், அதில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஆதாரத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக வெளியிட்டு வந்தார். அவர் புகார் கூறியவர்களில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், முறைகேடு, ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இளங்கோவன் வலியுறுத்தி வருகின்றார். மேலும் தமிழகத்தில் ஊழல், லஞ்சம் எந்தெந்த துறைகளில் நடக்கிறது என்பதை விலாவாரியாக ஒரு பட்டியலாக காங்கிரஸ் கட்சியினர் தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலில் ஏராளமான தமிழக அமைச்சர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட பேரணி
இந்த பட்டியலை பேரணியாக சென்று ஆளுநர் ரோசையாவை சந்தித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் தயாரித்துள்ள விரிவான பட்டியல் ஆளுநரிடம் அளிப்பதற்காக சென்னையில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

திரண்ட காங்கிரஸ் கட்சியினர்
பேரணியில் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், கார்த்தி சிதம்பரம், வி.எஸ்.ஜெ.தினகரன், எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் செல்வபெருந்தகை, மாவட்டச் செயலாளர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், காராத்தே தியாகராஜன், முன்னாள் எம்பி,க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மேலும் மூத்த தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆளுநருடன் சந்திப்பு
பின்னர் மாலை 6 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு இளங்கோவன் தலைமையில் 21 காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த இளங்கோவன் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின் போது மணிசங்கர் ஐயர், திருநாவுக்கரசர், குஷ்பு, விஜயதாரணி உள்ளிட்ட 21 காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

அரசியல் முக்கியத்துவம்
ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் பாட்டாளி மக்கள் கட்சி ஊழல் புகார் அளித்தது. அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் போட்டது.
இப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக காங்கிரசார் ஒன்று திரண்டு ஆளுநரிடம் மனு அளித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications