கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்.. அதிமுகவை தொடர்ந்து மாணவர்கள் கல்வி செலவை ஏற்கும் காங்கிரஸ்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை ஏற்கும் என்று அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தைத் தடுக்க ஒரு திட்டத்தை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரையும் செல்வப்பெருந்தகை சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, விஷ சாராய சாவுகள் காலந்தோறும் இருந்து வருகிறதுதான். இதனை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய துயர சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
சாராய வழக்குகளில் கைதாகிறவர்கள் சிறைகளில் இருந்தே இந்த தொழிலை நடத்துகின்றனர். கல்வராயன் மலைப் பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து மெத்தனால் கொண்டு வந்து கள்ளச்சாராயம் காய்ச்சுகின்றனர். இதனால் கள்ளச்சாராயம் விஷ சாராயமாகிறது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் கூட இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்க நடப்பு சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பங்களில் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
ஏற்கனவே அதிமுகவும் இதேபோல அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது, , கள்ளச்சாராயம் காரணமாக பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இக்குழந்தைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications