For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பள்ளிகளில் கடவுள் வாழ்த்துக்கு பதிலாக காமராஜர் வாழ்த்து: ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப்பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாட்டில் கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் நிலையில், அதைக் கொண்டாடும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

TN Govt., to bring 'Kamarajar bless' to all the Schools - Ramadoss

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பெருமை கர்மவீரர் காமராசரையே சாரும். 1954 ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி முறையை கைவிட்டார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் மூடப்பட்டப் பள்ளிகளை திறந்ததுடன், தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை 27 ஆயிரமாக உயர்த்தினார்.

கல்விக்காக குழந்தைகள் அதிக தூரம் அலையக்கூடாது என்பதற்காக அனைத்து கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளை தொடங்கினார். குழந்தைகள் கல்விக்கு பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு இப்போது மதிய உணவு வழங்கப்படுவதற்கு வழிகாட்டியாக விளங்கியவர் அவர். கல்வி முன்னேற்றம் தான் அவரது முதன்மை பணியாக இருந்தது.

காமராஜரின் காலத்தில் தரமான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுத்தப்பட்டது. சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தவரும் காமராசர் தான். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தான் தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகளும், நீர்ப்பாசனத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஒரு மாநிலமும், அதன் மக்களும் முன்னேற்ற என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் காமராஜர் திட்டமிட்டு செயல்படுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வை வேறு எந்த தலைவருக்கும் இல்லை.

ஆனால், தமிழகத்தில் இன்று கல்வியின் தரம் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் மட்டமானவை, தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் வழிக் கல்வி முடக்கப்பட்டு, சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும் ஆங்கில வழிக் கல்வி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

காமராசர் விரும்பிய சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வியை இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும். அதற்கெல்லாம் மேலாக கல்விக்கு காமராஜர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்க அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது மட்டும் போதுமானதல்ல.

கல்விக்கு அவர் ஆற்றிய பணிகளைப் பற்றி தந்தைப் பெரியார் குறிப்பிடும் போது,"கல்வி நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குப் பதில் காமராஜர் வாழ்த்துப் பாட வேண்டும். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர் தோறும் தொழில் வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர்கள் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை எவரேனும் மறுக்க முடியுமா?" என்று வினா எழுப்பியிருந்தார்.

தந்தை பெரியாரின் வினா அர்த்தமுள்ளது. அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக காமராஜர் வாழ்த்துப் பாடும் வகையில் உரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Pattali Makkal Katchi founder Ramadoss requested that TN Govt., to bring 'Kamarajar bless' instead of 'God bless' to all the schools in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X