காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஜெயலலிதாவிடம் கேளுங்கள்.. நிருபர்களுக்கு ஸ்டாலின் பதில்
சென்னை: தமிழகத்தில் ரவுடிகளின் ஆதிக்கத்தையும், படுகொலைகளையும் தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமை என திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதா என்பதை முதல்வர் ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால், சட்டம்-ஒழுங்கை அவர் தான் கையில் வைத்துள்ளார். அவர்தான் உள்துறை அமைச்சராகவும், காவல்துறையின் அமைச்சராகவும் உள்ளார்.

தமிழகத்தில் இருக்கும் பல கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி இன்றைக்கும் கூட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தெளிவான கடிதம் எழுதி இருக்கின்றார். எனவே ரவுடிகள் ஆதிக்கத்தையும், படுகொலைகளையும் தடுத்துநிறுத்துவது தமிழக அரசின் கடமை.
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் போன்ற ஒரு நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பது குறித்து சட்டசபையில் குறிப்பிட்டுள்ளேன். அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது. அந்த நிதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கேட்டிருந்தேன். ஆனால் அது தொடர்பாக எந்தவித பதிலும் இல்லை.
புகார் அளித்தால் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், காவல்துறையில் நிறைய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறித்து சட்டசபையில் ஆதாரத்துடன் பேசியிருக்கிறேன். காவல்துறையில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இந்த அரசு நிரப்பவில்லை என்பது தான் இன்றைய நிலை. தேர்தலுக்கு முன்பாக இதனை நீதிமன்றம் கூட கண்டித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications