அம்மாவை மகிழ்ச்சிபடுத்த மாநிலத்திற்கு எந்த தீமையையும் செய்ய தமிழக அரசு தயங்காது: ராமதாஸ்
சென்னை: முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒத்திவைத்திருப்பதிலிருந்து ஜெயலலிதாவை மகிழ்ச்சியில் வைத்திருப்பதற்காக மாநிலத்திற்கு எந்த தீமையையும் செய்ய அரசு தயங்காது என்பது உறுதியாகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அடுத்த மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் மாதம் 9,10 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கோடைகாலம் முடிவடைந்த பிறகு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினால் அதிக அளவில் முதலீடு செய்வதாக வெளிநாட்டு தொழிலதிபர்கள் கூறியதாகவும், அதையேற்று தான் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
கோடை காலத்திற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. மாநாடு வெட்டவெளியில் நடக்கப் போவதில்லை.மாநாட்டிற்கு வரும் தொழிலதிபர்கள் குளிரூட்டி வசதி கொண்ட விமானத்தில் வந்து, குளிரூட்டி வசதி கொண்ட அரங்கில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கப் போகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது கோடைகாலத்தில் என்ன பாதிப்பு ஏற்படும்? அரசு கூறுவது உண்மையான காரணம் இல்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
தமிழ்நாட்டில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் யாருடைய கையால் திறக்கப்பட வேண்டும் என்று கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவோ, அதே காரணத்திற்காகத் தான் முதலீட்டாளர்கள் மாநாடும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதை சிறு குழந்தைகள் கூட மிகத் தெளிவாக அறிந்திருக்கின்றனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மின்துறையில் ரூ.23,000 கோடி, மற்ற துறைகளில் ரூ.53,000 கோடி என மொத்தம் ரூ.76,000 கோடி முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது உண்மையாக இருந்தால், ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி இதுவரை முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட தொழிலதிபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடுவது தான் மிகச்சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும்.
அதைவிடுத்து முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒத்திவைத்திருப்பதிலிருந்து ஜெயலலிதாவை மகிழ்ச்சியில் வைத்திருப்பதற்காக மாநிலத்திற்கு எந்த தீமையையும் செய்ய அரசு தயங்காது என்பது உறுதியாகிறது. உண்மை என்னவெனில் தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு, ஊழல் ஆகியவற்றின் காரணமாக முதலீடு செய்ய எவரும் முன்வரவில்லை. தடையின்றி மின்சாரம் கிடைக்காததால் தமிழகத்தில் பல பகுதிகளில் செய்திருந்த முதலீட்டை தொழிலதிபர்கள் கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விட்டனர். இதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் நிலவும் குழப்பங்கள் ஒரு புறமிருக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட முதலீடுகளாலும் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்பட்டதாக தோன்றவில்லை.
சென்னையில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தொழில் தொடங்கும் நோக்குடன் இதுவரை 33 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும், அந்த நிறுவனங்கள் ரூ. 31,706 கோடி முதலீட்டில் தொடங்கும் தொழில்களின் வாயிலாக 1.62 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுதவிர தொழில்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வழிகாட்டு மையத்தின் மூலம் ஒற்றைச்சாளர முறையில் 35 தொழில்திட்டங்களைத் தொடங்குவதற்காக ரூ.14,896 கோடி முதலீடு பெறப்பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். ஆக மொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.46,602.72 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறுகிறது. இதன்மூலம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எல்லா அறிவிப்புகளுமே வெற்று அறிவிப்புகளாகத் தான் உள்ளன. மக்களை ஏமாற்றுவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடுவதாக தோன்றுகிறது.
ஒருவேளை உண்மையாகவே புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட்டதாக தமிழக அரசு கருதினால் இதுவரை பெறப்பட்ட ரூ.46,602.72 கோடி முதலீட்டைக் கொண்டு தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன? அந்தத் தொழிற்சாலைகளின் மூலம் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மக்கள் வரிப்பணத்திலிருந்து மாநாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடி எந்தெந்த வகைகளில் செலவு செய்யப்பட்டது என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications