வாழ்வாதார பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையின்மை... தமிழகத்தின் சாபக்கேடுதானா?
சென்னை: தமிழகத்தின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகளில் ஒன்றுபட்டு போராடுவது அல்லது அரசு எடுக்கும் நிலைப்பாட்டை ஒருமித்த குரலில் ஆதரிப்பது என்பது எட்டாக்கனியாகி, அது மாநிலத்துக்கும், மக்களுக்கும் பெரும் சாபக்கேடாகத்தான் இருந்து வருகிறது.
தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் உட்காருகின்றன.. அனைத்து ஆட்சிக் காலங்களிலுமே காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி, பவானி என நதிநீர் பிரச்சனைகள்தான் என்றில்லை.. மீத்தேன், கெயில் எரிவாயு குழாய், என்எல்சி தனியார் மயம், சேலம் இரும்பாலை தனியார் மயம் என நாலாபுறமும் பிரச்சனைகள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன...
இத்தனை ஆண்டுகளாகியும் இந்த விவகாரங்கள் எதற்குமே உருப்படியான தீர்வு எட்டப்படாமலேயே நீடித்துக் கொண்டிருக்கிறது... ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அறிக்கைகளையும் போராட்டங்களையும் நடத்துகின்றன... எந்த அரசாங்கமாக இருந்தாலும் தம்முடைய செயல்பாட்டை வெளிப்படுத்த நீதிமன்றம் போவது, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது என்ற போக்கை கடைபிடித்து வருகிறது..

குறுக்குசால் ஓட்டுவது...
ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருகுடையின் கீழ் திரண்டு தமிழகத்தின் ஒற்றுமையை காட்ட வேண்டும்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட குரல் கொடுக்க வேண்டும் என்ற சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு எப்போதும் பொய்த்துப் போன ஒன்றாகவே இருக்கிறது... தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைக்காமல் இருப்பது அல்லது ஆகமட்டும் குறுக்குசால் ஓட்டுவது என்பது திமுகவின் பாணி...

பெரியண்ணன் பாணி
திமுக ஆட்சியில் இருந்தால் சொல்லவேண்டியதே இல்லை... தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருப்பதாகவே அதிமுக நினைத்துக் கொள்ளாது... இப்படி இந்த 2 பெரிய கட்சிகளுமே மாறி மாறி பெரியண்ணன் போக்கில் நடந்து கொள்வதால் இதர கட்சிகளும் ஏதோ நாங்களும் இந்த பிரச்சனைக்கு போராடுகிறோம் என்ற இருப்பை வெளிப்படுத்துகின்றன... ஆனால் கர்நாடகாவைப் பாருங்கள்...

ஒன்றுபட்ட கர்நாடகா
காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் என அத்தனை கட்சிகளின் தலைவர்களும் எம்.பி., எம்எல்ஏக்களும் கர்நாடகத்தின் உரிமைக்காக ஒன்று திரண்டு குரல் கொடுக்கின்றன... அது காங்கிரஸ் அரசு அல்லது பாஜக அரசு எதுவாக இருந்தாலும் அந்த மாநில அரசு எடுக்கும் முடிவை அப்படியே ஆமோதித்து ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன அனைத்து அரசியல் கட்சிகளும்...

சாபக்கேடுதான்
கன்னட இனவாதம் பேசுகிற வாட்டாள் நாகராஜ் வகையறாக்கள்தான் போராட்டங்களைத் தூண்டிடுவிடுகிற அதே நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் போராட்டங்களில் கை கோர்த்து குதிக்கவும் செய்கின்றனர். ஆனால் தமிழகத்தின் சாபக்கேடு ஒற்றுமை என்றால் என்ன என்பதாகத்தான் இருக்கிறது....

ஒருங்கிணைந்த கர்நாடகா
கர்நாடகாவின் மைசூர், மாண்டியா பகுதிகள் காவிரி நீர் பிரச்சனையில் பற்றி எரிந்தால்... பெல்காம் உள்ளிட்ட பகுதிகள் கண்டுகொள்ளாமல் இருந்த காலமும் இருந்தது... ஆனால் ஒட்டுமொத்த கர்நாடகாவும் இப்போது ஒருமித்து இணைந்து போராடுகிறது...

தமிழகத்தின் அவலம்
தமிழகத்திலோ டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டம்தானே? என்று காவிரி பிரச்சனையில் தென் தமிழகம் பாராமுகம் காட்டுகிறது...
மேற்கு மாவட்ட பிரச்சனைதானே என்று கெயில் விவகாரத்தில் வடக்கு மாவட்ட மக்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்...
கூடங்குளம் பிரச்சனைதானே என்று டெல்டா, மேற்கு, வடக்கு மாவட்ட மக்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்....
மீனவர் பிரச்சனைதானே என்று ஒட்டுமொத்த தமிழகமே வேடிக்கை பார்க்கிறது...
அதிமுக அரசுதானே என்று திமுக ஒதுங்குகிறது... திமுக அரசுதானே என அதிமுக முகட்டைப் பார்க்கிறது...
இதனை சாபக்கேடு என்று சொல்லாமல் வேறு எந்த வார்த்தையால் விமர்சிப்பதாம்?
என்றுதான் இந்த இழிவுநிலை நீங்கி தமிழகம் ஒற்றுமையாக ஒருமித்த குரலில் தம்முடைய உரிமைகளுக்காக போராடுமோ? என்பதுதான் சாமானியத் தமிழனின் பெரும் ஏக்கமாக இருந்து வருகிறது...












Click it and Unblock the Notifications