கடலூர் மாவட்டத்தில் 850 கிராமங்களுக்கு மின் விநியோகம் சீரமைப்பு
சென்னை: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 850 கிராமங்களில் மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் வகையில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், காஞ்சீபுரம், விழுப்புரம், ஈரோடு, கோயம்புத்தூர், தர்மபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களிலிருந்து பணிபுரியும் 2 ஆயிரத்து 350 மின்சார பணியாளர்களால் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இதனை துரிதப்படுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின்மாற்றிகள், 226 கி.மீ., தூரத்திற்கு மின்வட கம்பிகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,313 மின்கம்பங்கள், 13 மின்மாற்றிகள் மற்றும் 137 கி.மீ. தூரத்திற்கு மின்வட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
5 நகராட்சிகளுக்கும், 15 நகர பஞ்சாயத்துகளுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. 905 கிராமங்களில், 700 கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து நேற்று 150 கிராமங்களுக்கு மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 55 கிராமங்களில் மழைநீர் வடிந்தவுடன் மின் வினியோகம் சீரமைக்கப்படும்.
கடந்த 11-ந்தேதி அன்று ஒரே நாளில் 161 கிராமங்களுக்கு மின்வினியோகம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 8 கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பாதை வழித்தடங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு முழுவதுமாக மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது.
இப்பணிகளை நேரில் பார்வையிட்டு அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைத்திட வேண்டி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மு.சாய்குமார், இயக்குநர் (பகிர்மானம்) மு.பாண்டி மற்றும் தலைமைப்பொறியாளர் மற்றும் மின் தொடரமைப்பு திட்டங்கள் செந்தில்வேல் ஆகியோர் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications