வைத்து செய்யும் சூரியன்! அடித்து நொறுக்கும் வெயில்! தமிழகத்தில் 108 டிகிரியை தொட்ட வெப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் வைத்துச் செய்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 18 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்கவே கோடைக் காலத்தில் வெப்பம் உச்சத்தில் இருக்கும். பல நேரங்களில் வட இந்தியாவில் வெப்ப அலைகளும் கூட ஏற்படும். மார்ச்சில் தொடங்கினால் மே மாதம் வரை வெப்பம் உச்சத்தில் இருக்கும்.

பருவநிலை மாற்றம் தொடங்கிப் பல காரணங்களால் முந்தைய ஆண்டை காட்டிலும் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் இந்தாண்டு எல்லாம் பிப். மாதமே வெப்பம் உச்சத்தில் இருந்தது
வெப்பம்: அப்போது பிப். மாதம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவானது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் வெயில் உச்சம் தொட்டத்து. ஏற்கனவே இந்தாண்டு கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதீதமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர். இதற்கிடையே மோச்சா புயல் காரணமாகக் கடந்த சில காலமாகப் பரவலாக நல்ல மழை பெய்தது.
மோச்சா புயல் கரையை கடந்துள்ள நிலையில், மீண்டும் சில நாட்களாக வெப்பம் உச்சம் தொட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே கூட வர முடியாத அளவுக்கே வெப்பம் உள்ளது. இதனிடையே இன்று மட்டும் தமிழகத்தில் 16 இடங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் என மொத்தம் 18 இடங்களில் வெப்பம் உச்சம் தொட்டது.
16 இடங்கள்: தமிழ்நாட்டில் மட்டும் இன்று ஒரே நாளில் 16 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், பரங்கிப்பேட்டை, ஈரோடு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் மதுரை ஏர்போர்ட், திருச்சி, கடலூரில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

அதேபோல மதுரை நகரம், தஞ்சையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், பாளையங்கோட்டை 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ள நிலையில், நாமக்கல், சேலம், நாகையிலும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை: தலைநகர் சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல புதுச்சேரி, காரைக்காலிலும் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் முடியும் வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர். மதிய நேரங்களில் மக்கள், குறிப்பாக வயதானோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications