பால் பாக்கெட்டை 100 ரூபாய்க்கு விற்ற வியாபாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் விக்கிரமராஜா??
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கலுக்கு வட்டியில்லா சிறப்புக் கடன் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு வணிர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். அதேசமயம், வெள்ள சமயத்தின்போது பால் பாக்கெட், குடிநீர் கேன் போன்றவற்றை மிகக் கொடூரமான விலைக்கு விற்ற வியாபாரிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரது சங்கம் என்ன நிவாரணம் தரப் போகிறது என்று இதுவரை இவர் வாயே திறக்காமல் இருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களை விட, அவர்களுடன் தாயாய் பிள்ளையால் பழகிய மக்களுக்குத்தான் மிகப் பெரிய அதிர்ச்சியும், பாதிப்பும் இந்த மழை வெள்ளத்தின்போது காத்திருந்தது.
கிடைத்தவரை லாபம், எரிகிற வீட்டில் பிடுங்கித் தின்பது போன்ற அத்தனை மோசமான உதாரணங்களையும் சுட்டிக் காட்டும் அளவுக்கு சென்னை நகரில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் நடந்து கொண்டது மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை.

வெள்ளத்தைப் பயன்படுத்தி
வெள்ளம் வந்த சமயத்தில் சென்னையே சின்னாபின்னமாகிப் போனது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க அரசுத் தரப்பில் முதல் உதவிகள் வரவில்லை. மாறாக சக சென்னை மக்களும், பல்வேறு தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களுமே சென்னை மக்களுக்கு உதவிக்கு ஓடி வந்தனர்.

காசு பார்த்த வியாபாரிகள்
வெள்ளத்தில் சென்னை மிதந்தபோது மின்சாரம் இல்லை, பால், குடிநீர் கிடைக்கவில்லை. செல்போன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களும் செயலிழந்தன. இஇந்தப் பெரும் நெருக்கடியான நேரத்தில் வியாபாரிகள் பலர் மக்களின் கஷ்டத்திலும் காசு பார்த்தனர், வியாபார நோக்குடன் மட்டுமே செயல்பட்டது மக்களை அதிர வைத்தது.

அரை லிட்டர் பால் ரூ. 100
அரை லிட்டர் பாலை ரூ. 100க்கு விற்ற கொடுமையை மக்கள் கண்டனர். வாட்டர் கேன் ரூ. 150க்கு விற்கப்பட்டது. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களின் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி அநியாய விலைக்கு விற்றனர் பல வியாபாரிகள்.

கடன் கேட்கும் சங்கத் தலைவர்
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. உயிர் பிழைத்தால் போதும் என்ற அவல நிலையில் அவர்கள். தட்டிக் கேட்க வேண்டிய காவல்துறையும் கேட்கவில்லை. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் தர வேண்டும் என்று கேட்டுள்ளார் வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா.

ஜேட்லியிடம் சந்திப்பு
வணிகர்களுக்கு முத்ரா வங்கி மூலம் வட்டியில்லா சிறப்புக்கடன் திட்டத்தை அறிவிக்கவேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலத் தலைவரான ஏ.எம்.விக்கிரமராஜா மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கு அறிவுறுத்துங்க
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். மத்திய அரசின் சேவை வரி வருமானத்தில் சில சதவீதங்கள் ஒதுக்கீடு செய்து பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய அரசு வழங்கவேண்டும்.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாட்டில் 6 மாதம் தள்ளிவைக்கவேண்டும். வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்டவும், தொடர்ந்து தொழில் நடத்தவும் முத்ரா வங்கி மூலம் வட்டியில்லா சிறப்புக்கடன் திட்டத்தை மத்திய அரசின் மானிய உதவியுடன் அமல்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications