சொல்லாமல் கொள்ளாமல் இன்றே தொடங்கிய பஸ் ஸ்டிரைக்.. தமிழகம் முழுவதும் மக்கள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் இன்றே போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சை, தேனி, அரியலூர், உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

சென்னை உட்பட..
டிப்போக்களில் அரசு பேருந்துகளை நிறுத்திவிட்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சென்னையில் பல்லவன் சாலை பணிமனையில் பேருந்துகளை தொழிலாளர்கள் நிறுத்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
போக்குவரத்து கழக அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதிப்பு
அரசு நாமம் போட்டுவிட்டதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் அவதி
இது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு உடனடியாக தலையிட்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி - குன்னூரில் பஸ்கள் நிறுத்தம்'
ஊட்டி, குன்னூரிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கும்பகோணம், விழுப்புரம், கடலூரிலும் நிறுத்தப்பட்டுள்ளன. மயிலாடுதுறைக்கும் பஸ்கள் போகவில்லை. திருத்துறைப்பூண்டியிலும் பஸ்கள் ஓடவில்லை.

மதுரை
மதுரையிலிருந்தும் வெளியூர்களுக்குப் போகும் பேருந்துகளை நிறுத்தி விட்டனர். இதனால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது. சென்னைக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் கிளம்பிப் போயுள்ளது.


Click it and Unblock the Notifications
