“தோட்டத்தை” ஆளும் மும்மூர்த்திகள்... கூட்டணி இழுபறிக்கு காரணமும் அவர்களே!
சென்னை: வரும்.. ஆனா வராது.. என நீண்ட காலமாக கூட்டணி குறித்த அறிவிப்பை இதோ சொல்வோம், அதோ சொல்வோம் என இழுத்தடித்து வருகிறது சைக்கிளைத் தவற விட்டு, தோப்பைக் கைப்பற்றிய கட்சி.
இந்த இடைப்பட்ட காலத்தில் தனித்துப் போட்டி, இல்லை கூட்டணி தான் என மற்ற கட்சிகள் தங்கள் காட்சிகளைக்கூட மாற்றி விட்டன. ஆனால், மேற்கூறிய கட்சி அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
ஒவ்வொருமுறை செய்தியாளர் சந்திப்பிலும், எப்படியும் இம்முறை கூட்டணி குறித்து வாய் திறப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால், வழக்கம் போல், ‘அப்புறம் சொல்றேன்' என சமாளித்து வருகிறார் அக்கட்சித் தலைவர்.
ஏன் இந்த குழப்பம், ஒன்று கூட்டணி இல்லை தனித்துப் போட்டி என அறிவிக்க வேண்டியது தானே என அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தால், இதன் பின்னணியில் மூன்று பேர் கொண்ட அணி ஒன்று இருப்பது தெரிய வருகிறது.
கட்சியின் மூத்தத் தலைவர்களான அவர்களுக்கு இலையோடு தோப்பு சேர்வது தான் சரியாக இருக்கும் என்பது தான் முடிவாம். எனவே, அவர்களது பேச்சுக்கு தலைவரும் தலையாட்டி வருகிறாராம்.
இதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆளும்கட்சி வேட்பாளர் பட்டியலைக் கூட அறிவித்து விட்டது. ஆனால், தொடர்ந்து பழம் கனியும் என காத்திருக்கிறார்களாம் தோப்புக் கட்சிக்காரர்கள்.
சின்னம் பற்றி பிரச்சினையில்லை, எத்தனை தொகுதிகள் கொடுத்தாலும் அதில் ஜெயித்துக் காட்டுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்களாம். இதனால் தொடர்ந்து கூட்டணித் தூது விடுக்கப்பட்டு வருகிறதாம்.
தோப்பிற்கு வசந்தகாலம் வருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...












Click it and Unblock the Notifications