அரியலூரில் டிரவுசர் திருடர்கள்... ஒரு 'டவுசரை' பிடித்த மக்கள்.. போலீஸ் காக்க முயல்வதாக புகார்!
அரியலூர்: அரியலூரைக் கலக்கி வந்த டிரவுசர் திருடனை பொதுமக்கள் சிரமப்பட்டு பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தால், அவனை மன நிலை பாதித்த நபர் என்று போலீஸார் கூறுகின்றனராம். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
எல்லா ஊரையும் போலவே அரியலூர் மாவட்டத்திலும் திருட்டுக்குப் பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் திருட்டுச் சம்பவங்கள் குறித்த புகார்கள்தான். ஆனாலும் குற்றவாளிகள்தான் யாருமே சிக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஜனவரி 6ம் தேதி கீழப்பழுவூர் என்ற இடத்தில் இரும்புக் கடை வைத்துள்ள நடராஜன் கடைக்குள் யாரோ புகுந்து பூட்டை உடைத்து பணத்தை எடுக்க முயன்றனர்.
ஆனால் அங்கிருந்த லாக்கரில் ஒரு பைசா கூட இல்லை. இதனால் கடுப்பான அவர்கள், கடையிலிருந்த பொருட்களை தூக்கி வீசி சூறையாடினர். பின்னர் பிரசன்னா, ராஜேந்திரன் என இருவரது வீடுகளுக்குள் புகுந்துள்ளனர்.
அப்போது ஜோதி என்ற பெண் அவர்களைப் பார்த்து விட்டார். உடனே கூச்சல் போட்டுக் கத்தினார். கொள்ளையர்கள் டிரவுசர் போட்டிருந்தனர். அவர்கள் ஜோதி கத்தியதைப் பார்த்து கோபத்தில் தங்களிடமிருந்த கம்பியை எடுத்து அவரைத் தாக்கினர். அதில் ஜோதி மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் போட்டிருந்த 3 பவுன் சங்கிலியைத் திருடிக் கொண்டு தப்பி விட்டனர். அதே நாள் இரவில் இரும்புலிக்குறிச்சி கிராமத்திலும் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருடர்கள் பீதியில் செய்வதறியாது தவித்த அந்த பகுதி மக்கள், போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் பலனில்லை.
இதையடுத்து இரவு நேர ரோந்தில் பொதுமக்களே ஈடுபட்டனர். நேற்று இரவு, விளாங்குடியை அடுத்துள்ள காவானூர் எனும் கிராமத்தில் டிரவுசர் கொள்ளையர்கள் 4 பேர் ஒரு வீட்டில் நுழைந்தபோது அதை கண்ட சிலர் மற்றவர்களுக்கு தகவல் தர நிலைமையை புரிந்துகொண்ட கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓட்டமெடுத்தனர்.
ஆனாலும் விடாமல் மக்கள் துரத்தியதில் ஒரு டிரவுசர் மட்டும் சிக்கியது. அவனைப் பிடித்து செமத்தியாக அடித்து பின்னர் கட்டி வைத்து விட்டுப் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வேகமாக வந்து அவனைப் பிடித்துச் சென்றனர்.
அவனது பெயர் ராஜா. ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவன். அவனது கூட்டாளிகள் குறித்த விவரத்தை போலீஸார் பெற்றுள்ளனர். அவர்களைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென ராஜாவை மன நிலை பாதித்த நபர் என்று போலீஸார் கூறி வருவதாக தகவல் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கஷ்டப்பட்டு பிடித்துக் கொடுத்தால் இப்படி திருடனைத் தப்ப விடும் வகையில் போலீஸார் நடந்து கொள்வதா என்று அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஆனால் போலீஸ் தரப்பிலோ, அவனுக்கு மன நிலை பாதித்துள்ளது. இது தொடர்பான சான்றிதழ் கூட உள்ளது. எதற்காக இந்த ஊருக்கு அவன் வந்தான் என்று தெரியவில்லை. வழி தவறி வந்து விட்டதாக அவனது தரப்பினர் கூறுகிறார்கள் என்று போலீஸார் கூறுகிறார்கள்.
ஆனால் திருடர்களுக்கு வேறு ஏதோ செல்வாக்கான பின்னணி இருப்பதாகவும், அதன் மூலம் அவர்களைக் காக்க முயற்சி நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
காவல்துறைதான் இதை விளக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications