ஜெ.விற்காக சிறை சென்ற சசிகலா தேச துரோகியா?.... தினகரன் கேள்வி
ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலாவை தேச துரோகியாக சித்தரிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலாவை தேச துரோகியாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது என்று டிடிவி தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சசிகலா பரோலில் வந்துள்ளார்.
நேற்றிரவு பரோலில் வந்த சசிகலா தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

நடராஜன் மருத்துவமனையில் அனுமதி
அப்போது அவர் கூறுகையில், சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக கடந்த 20 நாள்களாக காத்திருந்தார். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அவருக்கு உறுப்புகள் தானமாக கிடைத்தது. இதனால் கடந்த 4-ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சமர்பித்த ஆவணங்கள்
சசிகலா கணவரை சந்திக்க கடந்த 28-ஆம் தேதியே பரோல் கேட்டு சிறையில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவர் சமர்பித்த ஆவணங்கள் சரியாக இருந்தபோதிலும் அவருக்கு காலம் தாழ்த்தப்பட்ட பரோல் கிடைத்தது. அவர் பரோலுக்கு விண்ணப்பித்த போது அவர் தங்குவதற்காக குறிப்பிடப்பட்ட முகவரி, நடராஜன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முகவரி ஆகியவற்றை சரிபார்க்குமாறு சென்னை காவல் துறைக்கு கர்நாடக காவல் துறையினர் அனுப்பினர்.

எடப்பாடி அரசின் நிர்பந்தம்
ஆனால் சசிகலாவின் நிரந்தர முகவரி என்பது போயஸ் கார்டன் என்றே அவரது அடையாள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் அச்சம் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் எங்கே போயஸ் கார்டனில் தங்கிவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவும், அவர் எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்திவிடக் கூடாது என்பதற்காகவும் இதுபோல் கடுமையான நிபந்தனைகளை விதிக்குமாறு கர்நாடக காவல் துறையினரை நிர்பந்தித்துள்ளனர். சசிகலாவுக்கு போயஸ் கார்டனில் தங்க விருப்பமே இல்லை.

இது என்ன நியாயம்
சென்னை சசிகலா வந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்த நிபந்தனைகளை விதிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டதாக கர்நாடக சிறைத் துறை தெரிவித்தது. வீட்டை விட்டு மருத்துவமனைக்கும் , மருத்துவமனையிலிருந்து வீட்டையும் தவிர்த்து எங்கும் செல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளனர். இது என்ன நியாயம். அவர் கட்சியின் பொதுச் செயலாளர். அவரை பார்க்க கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வரத்தான் செய்வார்கள். இவர்கள் எல்லாரும் சிறைக்கு சென்று சசிகலாவை பார்ப்பது என்பது சாத்தியமில்லை.

சசிகலா அப்பாவி
சசிகலா எந்த பாவமும் அறியாதவர். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிய துரோகத்தை மட்டுமே செய்துள்ளார். ஜெயலலிதாவுக்காக சிறை சென்ற சசிகலாவை தேச துரோகி போல் சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவை வீட்டுக் காவலில் வைப்பது போல் இவர்கள் சசிகலாவை வைக்க வைத்துவிட்டனர். சசிகலாவுக்கு பரோல் வழங்கும் காலத்தில் அவர் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம், எங்கும் செல்லலாம். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கட்சி நிர்வாகிகளை பார்க்கலாம். எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசிக்கலாம் என்று கர்நாடக சிறைத் துறை கூறியிருந்தது.

துரோக அரசு என்றால் கோபிக்கிறார்கள்
பரோல் கிடைக்க 4 நாள்கள் காலம் தாமதமானதற்கு எடப்பாடி பழனிச்சாமியன் தியாக அரசுதான் காரணம். துரோகம் அரசு என்றால் கோபித்து கொள்கிறார்கள். அதனால் தியாக அரசு என்று கூறுகிறேன். இந்த நிபந்தனைகளால் 5 நாள்கள் மட்டுமே பரோல் கிடைத்துள்ளது. இது ஜனநாயக நாடா இல்லை, இது என்ன ஒரு நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். யாரையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலா அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட எடப்பாடி அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால்தான் இத்தனை நிபந்தனைகளை விதித்து தகிடு தத்தம் செய்து வருகின்றனர். சபாநாயகரும், ஆளுநரும் நடுநிலை தவறிவிட்டனர். 18 பேர் தகுதிநீக்க வழக்கில் வெற்றி பெறுவர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications