3 தினகரன் ஆதரவு எம்பி.க்கள் முதல்வரை சந்தித்து மகிழ்ச்சி- மைத்ரேயன் ஹேப்பி!
3 தினகரன் ஆதரவு எம்.பிக்கள் முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியுள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரட்டை இலைக்கு இரு அணிகளும் உரிமை கோரியதால் அச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து சின்னத்தை கோரின.

பின்னர் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுகவின் கட்சியும், கொடியும், சின்னமும் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கட்சியும், சின்னமும் முதல்வர் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே கிடைத்துவிட்டதால் டிடிவி தினகரன் அணியிலிருந்து பலர் இந்த அணிக்கு தாவுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து பேசினார். இதேபோல் எம்.பிக்கள் விஜிலா சத்தியானந்த், புதுச்சேரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் முதல்வரை சந்தித்து அவரது அணியில் இணைந்து கொண்டனர்.
இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான மைத்ரேயன் எம்.பி.யும், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறுகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளனர். வரும்காலங்களில் டிடிவி தினகரன் அணியிலிருந்து இன்னும் பலர் முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications