தூத்துக்குடி: உள்ளாட்சி இடைத் தேர்தல் கலவரம் - தொடர் சிகிச்சையில் பாஜக மேயர் வேட்பாளர்
தூத்துக்குடி: உள்ளாட்சி இடைத்தேர்தல் கலவரத்தில் தாக்கப்பட்ட பாஜக மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. அ.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பாஜக சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பாஜக கட்சி வேட்பாளர் ஜெயலட்சுமி தனது கணவர் கனகராஜுவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று ஓட்டுப்பதிவு நிலவரங்களை பார்வையிட்டனர்.

தூத்துக்குடி திரவியபுரம் பகுதியில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை வேட்பாளர் ஜெயலட்சுமி பார்வையிட சென்றார்.
அப்போது அங்கு இருந்த அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக வேட்பாளருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் திடீர் தகராறு ஏற்பட்டது. இதில் வேட்பாளர் ஜெலட்சுமியை சிலர் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் அக்கட்சியினர் திரவியபுரம் மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து சம்பவஇடத்துக்கு உதவி ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திடீரென வேட்பாளர் ஜெயலட்சுமி மயக்கமடைந்தார். அவரை அவரது கணவர் கனகராஜ் மற்றும் அக்கட்சியினர் காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாஜக மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அ.தி.மு.க. கவுன்சிலரின் கணவர் செண்பகசெல்வன் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் வேல்முருகன், பாலகிருஷ்ணன், பாக்கியராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல அ.தி.மு.க.வை சேர்ந்த பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, அவரது கணவர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் தேவகுமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாஜக வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் கனகராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் ஜோயல், இந்து முன்னணி வக்கீல் அணி தலைவர் நாகராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications