முதலில் வேல்முருகன்.. இப்போ திருமாவளவன்.. திமுக கூட்டணிக்குள்ளேயே விமர்சன குரல் எழுப்ப காரணம் என்ன?
திமுக அணியில் இடம்பெற்றுள்ள வேல்முருகன், திருமாவளவன் அதிருப்தி குரலை வெளிப்படுத்துகின்றனர்.
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவது சலசலப்புகளை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தமிழக வாழ்வுரிமை கட்சி, திமுக கூட்டணியில் இடம்பெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் அண்மைக்காலமாக இரு கட்சித் தலைவர்களும் ஏதோ ஒருவகையிலான அதிருப்தி குரலை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அண்மையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிரான 200-வது நாள் போராட்டத்தில் வேல்முருகன் பங்கேற்றார். அதில் பேசிய வேல்முருகன், சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் திமுக அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறது; அதிமுக- திமுக இரண்டுக்கும் வேறுபாடு இல்லை எனவும் விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய முடியாது என பகிரங்கமாக கூறினார் வேல்முருகன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தவர் இளங்கோவன். ஆகையால் தாம் ஒரு காலத்திலும் காங்கிரஸுக்கோ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கோ வாக்கு சேகரிக்க முடியாது என கூறியிருந்தார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் பெயர்களை உச்சரித்தார். அதில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெயர் இடம்பெறவில்லை.

இன்னொருபக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் சற்று காட்டமாகவே பேசி வருகிறார். அண்மையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார் திருமாவளவன்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாமக-பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருகாலத்திலும் இருக்காது. பாஜகவுடன் சித்தாந்த ரீதியாக மோதக் கூடிய ஒரே கட்சி விசிக மட்டும்தான் என்றார். அத்துடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் காரை இந்துத்துவா சக்திகள் சுற்றி வளைத்து முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி பேசிய திருமாவளவன், தமிழ்நாடு காவல்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது எனவும் விமர்சித்தார். இதனையே தமது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியானது பாமகவில் இருந்து வேல்முருகன் வெளியேறியதால் உருவானது; விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாமகவை பரம வைரியாக கருதுகிறது. ஆனால் பாமகவோ அண்மைக்காலமாக திமுகவை நோக்கி கூட்டணிக்காக நகர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் வேல்முருகனும் திருமாவளவனும் அந்த அணியில் நீடிப்பது சாத்தியமில்லை என்பது யதார்த்தம. இந்த அரசியல் நகர்வுகளின் அடிப்படையில்தான் வேல்முருகனும் திருமாவளவனும் அடுத்தடுத்து அதிருப்தி குரல்களை வெஇப்படுத்துகின்றனரா? என்கிற கேள்வியையும் அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications