விஜய் கேட்ட ஒரு கேள்வி.. சுடசுட ரெடியாகும் பட்ஜெட்! மெகா பிளான்! ஜோசியர் தேதி சொன்னதும் தாக்கல்
சென்னை: திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டுப் போயிருப்பதாகவும், என்ன இருக்கிறது ? என்ன இல்லை ? என போய்ப்பார்த்தால் தெரியும் என்று பதவி ஏற்பில் கர்ஜித்தார் முதல்வர் விஜய். மேலும், திமுக ஆட்சி குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார் விஜய். இந்த கர்ஜனை பொதுவெளியில் மிக பரபரப்பை ஏற்படுத்திய அதேசமயம், கஜானாவைப் பார்க்காமலே, அது காலியாக இருப்பதாக எப்படிச் சொல்கிறீர்கள்? என்கிற விமர்சனங்களும் வெளிப்பட்டன.
இந்த நிலையில், நடப்பு நிதிஆண்டிற்கான பொது பட்ஜெட்டை இந்த மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த திமுக ஆட்சியில் நடப்பு நிதியாண்டிற்காக இடைக்கால பட்ஜெட்டைத்தாக்கல் செய்திருந்தது.
கடந்த திமுக ஆட்சியின் போது நடப்பு நிதியாண்டிற்காக இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்திருந்தது. தேர்தல் காலம் என்பதால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலானது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விஜய் முதலமைச்சராகியுள்ள நிலையில், பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், ஜூன் மாதம் முதல் அரசு செலவினங்களுக்கு, அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்
அதனால் இந்த மாதத்தில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், தலைமைச்செயலாளர் சாய்குமார், நிதித்துறை செயலாளர் சித்திக், முதல்வரின் செயலாளர்கள் செந்தில்குமார், லஷ்மி ப்ரியா, அண்ணா துரை, கூடுதல் செயலாளர் விஷ்ணு உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் விஜய்.
அப்போது, நிதி நிலைமையின் உண்மை நிலவரத்தை விரிவாக விவரித்த சித்திக், இடைக்கால பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கீடுகளும் மற்றும் திட்டங்கள் குறித்தும் விளக்கியிருக்கிறார். அப்போது, நீண்ட கால திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுடன், ஒவ்வொரு நிதி ஆண்டில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் எனும் யோசனையை விஜய் தெரிவித்திருக்கிறார். அதனை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இடைக்கால பட்ஜெட்டில் முந்தைய திமுக அரசு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு நிதிசார்ந்த விவகாரங்களுக்கு முற்றுப் புள்ளிவைக்கப்பட்டு ப்ரஸ் பட்ஜெட் தாக்கல் ஆகும் என தெரிகிறது.
இதற்கிடையில், வெள்ளை அறிக்கை தயாரிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார் விஜய். அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசால் உருவான ஊழல்கள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள கடன் சுமை குறித்தும் வெளிப்படையாக அறிவிக்கலாமா? என்கிற அளவிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனால், வெள்ளை அறிக்கையை பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அந்த வெள்ளை அறிக்கை வெளியாகும் போது, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வெள்ளை அறிக்கைகள் போல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெறுமனே சம்பிரதாயத்துக்காக அறிவிக்கப்பட்டதாக இல்லாமல் உண்மையாகவே இதுதான் வெள்ளை அறிக்கை என்கிற ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
இதற்கிடையே, பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பதால், அதற்குள் அமைச்சரவை விரிவாக்கம், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அது குறித்து, நேற்று இரவு நீண்ட நேரம் விவாதித்துள்ளார் முதல்வர் விஜய். நிதி அமைச்சர் தான் பட்ஜெட் உரை வாசிக்க முடியும். அதனால் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் செய்யக் கூடாது என்பதால் அது குறித்த விவாதம் ரொம்ப நேரம் நடந்துள்ளது. நிதித்துறையை தம்மிடமே வைத்துக்கொள்ளலாமா? அல்லது வேறு ஒருவருக்கு கொடுக்கலாமா? என்றும் ஆலோசித்திருக்கிறார் விஜய்.
இந்த நிலையில், பட்ஜெட் தாக்கலை எந்த தேதியில் வைத்துக் கொள்ளலாம் என ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேலிடம் கேட்டிருக்கிறாராம் விஜய். அவர் குறித்து தரும் தேதி கவர்னருக்கு அனுப்பி வைப்படும். அதற்கு முன்னதாக மேலும் பல அமைச்சர்களின் பதவியேற்பும், மொத்தமாக இலாகா ஒதுக்கீடும் நடக்கும் என்கிறது சட்டப்பேரவை வளாகம்.












Click it and Unblock the Notifications