இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்... அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
பெருந்துறை: இன்னும் 15 நாட்களில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப் படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பெற்றது. எனவே, நேற்று தலைமையாசிரியர்களை பாராட்டும் விழா பெருந்துறை அரசு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி விகிதம் அளித்த 234 பேர் சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன், மாவட்ட கல்வி அதிகாரிகள் குணசேகரன் (ஈரோடு), சிவாஜி (கோபி) மற்றும் மெட்ரிக் பள்லி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பரிசுகளை வழங்கிப் பேசினார்.
மேலும், இந்த விழாவில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.
விழாவில் அமைச்சர் பேசியதாவது :-
விஷன் 2023...
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டும் என்கிற நோக்கில் விஷன் - 2023 என்ற திட்டத்தை அறிவித்தார்.
நிதி ஒதுக்கீடு...
அந்த திட்டத்தின் முதல் படியாக கல்வி மற்றும் மருத்துவத்துறையை அறிவித்தார். அதன்படி, கல்வித்துறைக்காக ரூ 17 ஆயிரத்து 737 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார். இத்தகைய ஒதுக்கீடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
விலையில்லா மடிக்கணினி...
முதலமைச்சரின் சீரிய பணியால் இன்றைக்கு அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்றடைந்து வருகிறது. மாணவ - மாணவிகளுக்கு ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
மடிக்கணினி திட்டம்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மடிக்கணினி திட்டம் ஒரு வருடம் மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்தத் திட்டம் அங்கு தொடரவில்லை. ஆனால், தமிழ் நாட்டில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்றளவும் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிகரமாக செயல் படுத்தி வருகிறர்கள்.
மேலும் 20 ஆயிரம் ஆசிரியர்கள்...
இதுவரை கல்வித் துறையில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். இன்னும் 15 தினங்களில் மேலும், 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப் பட உள்ளனர்.
முதலிடம் தொடர வேண்டும்...
அரசு பொதுத்தேர்வில் இந்தாண்டு முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம் தொடர்ந்து இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஆசிரிய - ஆசிரியைகள் பாடுபட வேண்டும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications