சட்டசபை தேர்தல் 2016: கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் களம் காண நினைக்கும் தொகுதிகள் எவை?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக தை பொங்கல் நாளில் தேர்தல் கமிஷன் தனது பணியை தொடங்கிவிட்டது. வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவிற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அரசியல் கட்சியினரும் பரபரப்பாக பணியை தொடங்கிவிட்டதால் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் பங்கு பிரிப்பு என முதற்கட்ட வேலைகள் நடக்கும் முன்பாகவே யாருடன் யார் கூட்டணி என்பது இன்னமும் முடிவாகவில்லை. அதற்கு முன்பாக அரசியல் தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ, ஆகியோர் களம் காணப்போகும் தொகுதிகளை அடையாளம் காணத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த தொகுதி சாதகமான தொகுதி, எதில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் அலசி ஆராய்ந்து வருவதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தல் 2016
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் பரபரப்பாக தனது பணியை தொடங்கிவிட்டது. தேர்தல் அட்டவணை பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தைகள்
சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது பற்றியும் ஒருவித எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக உடன் கூட்டணி
2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற அதிமுகவும் சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு தயார் என்று சூசசமாக அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, ‘சூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்பேன்' என கூறியுள்ளார்.

திமுகவின் தேர்தல் வியூகம்
அதிமுகவை ஆட்சியை விட்டு இறக்கவேண்டும் என்று வியூகம் அமைத்து வரும் திமுக, பலமான கூட்டணியை அமைக்க முயற்சித்து வருகிறது. தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர ஒரு பக்கம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தங்களின் கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்திற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் கருணாநிதி.

சாதகமான தொகுதிகள்
கூட்டணி பேச்சுக்கள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தாங்கள் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கட்சியினரிடமும், நண்பர்களிடமும், கருத்து கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிக்கனியை பறிக்க
ஜெயலலிதா, ஸ்டாலின், கருணாநிதி, விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் தங்களது தொகுதியில் ஓரிரு நாள்கள் மட்டுமே வாக்கு சேகரிக்க முடியும். எனவே, எளிதாக வெற்றி பெறும் தொகுதியில் போட்டியிடவே அவர்கள் விரும்புகின்றனர்.

கொளத்தூரில் போட்டியிட தயார்
திமுக பொருளாளர் ஸ்டாலின் ஏற்கனவே கடந்த 5 மாதங்களாகவே நமக்கு நாமே பயணம் மூலம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவர் சென்னையை விட்டு வெளியே சென்று போட்டியிட மாட்டார். கடந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே தலைமை கட்டளையிட்டால் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா:
முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தலிலும் புது புது தொகுதிகளில்தான் போட்டியிடுகிறார். கடந்த 2011 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். சொத்துக்குவிப்பு வழக்கில் பதவியை இழந்த பிறகு, மேல்முறையீட்டில் விடுதலை பெற்று, சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிட்ட அவர், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தென் மாவட்ட தொகுதி
மழை, வெள்ளத்தால் சென்னை மாநகரில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, சென்னைக்கு வெளியே தென்மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவினரிடம் உள்ளது.

சொந்த ஊரில் கருணாநிதி
சென்னையில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 2011 தேர்தலில் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதுதான் தனக்கு கடைசி தேர்தல் என்று கூறி அவர் வாக்கு சேகரித்தார். ஆறாவது முறையாக முதல்வராகவேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்பட்டு வரும் கருணாநிதி மீண்டும் தனது சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரத்தில் விஜயகாந்த்
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியிலும், 2011ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தனது ரசிகர் மன்றங்கள் அதிகமாக இருப்பதால் இந்த தொகுதிகளை தேர்வு செய்த அவர், மீண்டும் ரிஷிவந்தியம் அல்லது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என தேமுதிகவினர் தெரிவிக்கின்றனர்.

வைகோ
சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கடந்த 8ம் தேதி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். எனவே, தென்மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்றும், தொகுதியை அடையாளம் காணும் பணியை அவர் தொடங்கியிருப்பதாகவும் மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் மாவட்ட தொகுதிகளுக்கு குறி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது பிறந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், அங்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளரை நிறுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், தனது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரிலும், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

பாமக முதல்வர் வேட்பாளரின் நிலை
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போது எம்.பி.யாக இருப்பதால் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

போட்டியிட விரும்பாத தலைவர்கள்
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள்
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உட்பட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள்கள் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைந்தால், அதுவும் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டால் போட்டியிடுவது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் முடிவு செய்துள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றியை தீர்மானிப்பது யார்?
களத்தில் எதிரிகளே இல்லை என்ற ஜெயலலிதாவே இப்போது கூட்டணிக்கு தயாராகிவிட்டார். ஆளும் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க திமுக, தேமுதிக, பாமக, மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்ட எதிர்கட்சியினர் முழு முனைப்போடு செயல்படத் தொடங்கிவிட்டனர். வெற்றியை தீர்மானிப்பது எந்த கட்சியிலும் சேராத நடுத்தர வாக்காளர்களே. எந்த பட்டனை அழுத்தி யாரின் தலை எழுத்தை மாற்றப்போகிறார்களோ பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications