தமிழுக்கு முக்கியத்துவம்.. பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது.. அமித் ஷா பதில்!
ராணிப்பேட்டை: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வந்த பின்னரே சிஐஎஸ்எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிவதாக கூறிய அமித் ஷா, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பாக தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் இந்தி திணிப்பு குறித்து கடுமையாக பதிவிட்டு வருகிறார். இன்று மு.க.ஸ்டாலின், திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல. வலிந்து திணிக்கப்படும் மொழிகளையே எதிர்க்கிறது.

இந்தி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மொழிகளை காப்பதே திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கை. தாய்மொழிகளை காக்க தமிழ்நாடு போட்டுத்தந்த பாதையை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. தமிழ் உட்பட இந்தியாவின் 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனை திமுகவினர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார். இந்த நிலையில் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழா ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுள்ளார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை தொடங்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். பிரதமர் மோடி வந்த பின்னரே சிஐஎஸ்எஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது.
ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications