சசிகலாவை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி சரண்டர் ஆயிட்டாங்களே?
எதிர்பார்க்கலைல்ல... இப்படி படார்னு கால்ல விழுவோம்னு எதிர்பார்க்கலைல்ல... என்பதுதான் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குகளில் அதிமுக அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் கமெண்ட்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்குக் பிறகு தமிழக முதல்வரானார் ஓபிஎஸ். அவர் ஏற்கனவே ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வராக பதவியேற்றவர் என்பதால் இதில் எந்த சர்ச்சையும் எழவில்லை.
அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாதான் வரவேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறி வருகின்றனர். அதில் மாறுபட்ட கருத்துக்கள் எழப்போவதில்லை.
சின்ன அம்மாவே கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து அந்த தீர்மானத்தை கொடுத்து வருகின்றனர்.
|
கோவில் போல கும்பிடு
கோயிலுக்குள் நுழையும்போது எப்படி படிக்கட்டை தொட்டுக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வார்களோ, அதைப்போலத்தான் போயஸ் கார்டன் வாசலில் காலெடுத்து வைக்கும்போதே தொட்டு கும்பிட்டுக் கொண்டு அதிமுக நிர்வாகிகள் உள்ளே நுழைகின்றனர். பாதுகாப்புப் படையினர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். வாசல் வராண்டாவில் அந்தக் கயிற்றை ஆளுக்கொரு பக்கம் இழுத்து பிடித்துக் கொள்கிறார்கள். அந்தக் கயிற்றுக்கு இந்தப்பக்கம் நிர்வாகிகள் வரிசையாக நிற்கிறார்கள். அந்தப்பக்கம் சசிகலா நின்று கொண்டு தீர்மானத்தை பெற்றுக் கொள்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுக-வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை கட்டிக் காத்திடவும் கழகத்தைக் காப்பாற்றிடவும் பெருமதிப்புக்குரிய சின்னம்மா கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும். மேலும் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாகச் செய்திடவும் தமிழகத்தை முன்னேற்றி, நல்லாட்சி தந்திடவும் தமிழகத்தின் முதல்வராக சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

தமிழகத்தை காக்க பதவியேற்பு
ஈரோடு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தோழியாக, சகோதரியாக இருந்து கழகத்தின் நடவடிக்கையைக் கவனித்து வந்த சின்னம்மா, ஜெயலலிதாவுக்குப் பிறகு, கழகத்தை காப்பாற்றுவதற்காக கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தையும் தமிழக மக்களைக் காப்பாற்றவும் அவர் முதல்வராகவும் பதவியேற்க வேண்டும் என்றார்.

கே.டி. ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பேசியபோது, அம்மாவின் நெருங்கிய தோழியுமாகவும், அவருக்குத் தாயாகவும் இருந்து கண்ணின் இமைபோல் இதயதெய்வம் அம்மாவை கவனித்துவந்த சின்னம்மா, கழகத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காக கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

கழகத்தை காக்க வேண்டும்
கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சம்பத் பேசும் போது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பிறகு, கழகத்தை கட்டிக் காப்பாற்றிடவும்அதிமுக உறுப்பினர்களை பாதுகாக்கவும் வேண்டி சின்னம்மா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

பணி தொடரவேண்டும்
தர்மபுரி மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன் அளித்த பேட்டியில், புரட்சித்தலைவி அம்மா முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்திட கழகத்தின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய கையோடு இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

சசிகலா மவுனம் கலைவாரா?
கொங்கு மண்டலத்தில் இருந்து சசிகலாவிற்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பும் என்று எதிர்பார்த்த நிலையில் ஒட்டு மொத்தமாக இப்படி அனைவரும் சரண்டர் ஆவார்கள் என்பது யாரும் எதிர்பாராத ஒன்றுதான். அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் இந்த கோரிக்கையை வைத்து வரும் நிலையில், சசிகலா இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவே இல்லை. அவர் மவுனம் கலைத்தால் மட்டுமே ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பாரா? அல்லது வழக்கம் போல அவர் தற்காலிக முதல்வர்தானா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications