வடிவேலு மகன் திருமணத்தின்போது என்ன பிரச்சினை..? - சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி விளக்கம்!
மதுரை: வைகைப் புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணத்தின்போது மணமகளின் வயது குறித்து யாரோ சில விஷமிகள் தேவையில்லாமல் புகார் கொடுக்கப் போய், அதுகுறித்து விசாரிக்க போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் திருமண மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆனந்தவள்ளி விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்துடன் யாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறயுள்ளார்.
வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதையும் மிகவும் எளிமையாக, அமைதியாக, சத்தமின்றி நடத்தினார் வடிவேலு. மணப்பெண் புவனேஸ்வரி மதுரை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர். வடிவேலு மனைவி வழியில் சொந்தம். திருமணத்திற்கு இரு வீட்டாரும், இரு வீட்டாரின் மிக மிக நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தனர்.

இந்த நிலையில் திருமணம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு திடீரென மண்டபத்திற்கு தல்லாகுளம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கெளசல்யா மற்றும் போலீஸார், சமூக நலத்துறை அதிகாரிகள் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மணமகள் புவனேஸ்வரிக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்றும், அவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தப்படுவதாகவும் தங்களுக்குத் தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து மணமகளிடம் நீங்கள விசாரியுங்கள் என்று வடிவேலு அவராகவே முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைத்தார். மேலும் சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியைத் தொடர்பு கொண்டு புவனேஸ்வரியின் கல்விச் சான்றிதழை ஆய்வு செய்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
விசாரணைக்குப் பின்னர் திருமணம் நடத்த்த தடை இல்லை என்று அதிகாரிகள் கூறி விட்டு கிளம்பிச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி கூறுகையில், மணமகள் புவனேஸ்வரி மைனர் பெண் என்றும், பணத்துக்காக அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றும் சைல்ட் ஹெல்ப் லைனுக்கு புகார் வந்திருந்தது. அதனால்தான் திருமண மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினோம்.
சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு, திருப்புவனம் பள்ளியில் படித்த புவனேஸ்வரியின் சான்றிதழை ஆய்வு செய்தோம். அவருக்கு 18 வயது பூர்த்தியாகி 7 மாதங்களாகிவிட்டன என்பதும், யாரோ உள்நோக்கத்துடன் புகார் செய்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது என்றார் அவர்.
அதிகாரிகள் விசாரணைக்காக வந்தபோது வடிவேலு மிகவும் கவலையாகி விட்டாராம். இருந்தாலும் நிதானமாக அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். விளக்கம் கொடுத்துள்ளார். அவர்கள் புகார் உள்நோக்கம் கொண்டது என்று கூறி விட்டுக் கிளம்பியபோதுதான் அவர் நிம்மதி அடைந்தாராம்.












Click it and Unblock the Notifications