ஜெனிவாவில் இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது: வைகோ
சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில் மன்னிக்க முடியாத துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக நடத்தியது.

இதுதொடர்பாக, ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்க அரசு, இங்கிலாந்து, மாண்டிநீரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து ஒரு வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தது. அந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழர்களுக்கு முழு நீதிக்கான அழுத்தம் குறைக்கப்பட்டது.
எனினும், இத்தீர்மானம் நேற்று விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசின் தீர்மானத்தை ஆதரித்து 23 நாடுகள் ஓட்டுப்போட்டன. கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, பாகிஸ்தான், பெலாரஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து வாக்கு அளித்தன.
ஆனால் வாக்கெடுப்பில் பங்கு ஏற்காமல், பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகிற விலாங்கு மீன் ஏமாற்று வேலையைச் செய்த 12 நாடுகளின் பட்டியலில் இந்திய அரசும் சேர்ந்துகொண்டது.
இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் மன்னிக்க முடியாத துரோகத்தை இந்தியா செய்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் பிரதிநிதி திலீப் சின்கா தனது அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்: "அமெரிக்கத் தீர்மானம், இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், அதன் இறையாண்மையைக் குலைப்பதாகவும் அமைந்து உள்ளது. இலங்கை அரசு ஆக்கபூர்வமான புனரமைப்பு வேலையைச் செய்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2009, 2012, 2013 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது' என்கிறார் இந்த யோக்கிய சிகாமணி.
1983 ஆகஸ்ட்16 இல், இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் நடப்பது தமிழ் இனப்படுகொலை. வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் இலங்கைத் தீவின் பூர்வகுடிமக்கள் என்று அறிவித்ததை அறியாத முட்டாள்களின் அரசா இன்றைய காங்கிரஸ் அரசு.
காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் மன்னிக்கவே முடியாத துரோகம் செய்வதற்கு ஒரே ஒரு காரணம்தான். ஈழத் தமிழ் இனப்படுகொலையில் இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி என்பதே அக்காரணம் ஆகும்.
உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களும், தமிழ்க்குல மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இனி மேற்கொள்ளவேண்டிய சூளுரை ஒன்றுதான். இனக்கொலைக் குற்றவாளியான ராஜபக்சே அரசையும், கூட்டுக் குற்றவாளியான சோனியாகாந்தி இயக்கிய இந்திய காங்கிரஸ் அரசையும், அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications