கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது - வைகோ
சென்னை: கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னுமிடத்தில் இரண்டு தடுப்பு அணைகளைக் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த அணைகளில் 48 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டு மைசூடு, பழைய மைசூடு நகரங்களை சுற்றி உள்ள பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்று கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் அறிவித்து இருக்கிறார். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரை தடுத்து அணைகள் கட்டி நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயற்படுத்திட கர்நாடக அரசு பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறது.
இதற்காகவே மேகதாதுவில் மூன்று அணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக மாநில அரசின் தன்னிச்சையான இந்த திட்டம் காவிரி நடுவர்மன்றம் வழங்கி உள்ள இறுதி தீர்ப்புக்கு எதிரானது ஆகும். புதிய அணைத் திட்டங்கள் குறித்து காவிரி நடுவர்மன்றம் தனது தீர்ப்பில், கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி எதையும் வழங்கவில்லை. காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடகம் நிறைவேற்றினால் தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் வரத்து குறைந்துவிடும்.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதிலும் புதுவை மாநிலத்திற்கு 7 டி.எம்.சி நீரும், சுற்றுச்சூழலுக்கும் மற்றும் ஆவியாதலுக்கும் 14 டி.எம்.சி நீரும் போக, தமிழ்நாட்டிற்கு கிடைப்பது வெறும் 171 டி.எம்.சி மட்டுமே. கர்நாடகம் மேலும் அணைகள் கட்டினால் இந்த சொற்ப நீர் கூட காவிரியில் முழுமையாக கிடைக்காமல் தமிழ்நாட்டு விவசாயம் காவிரி பாசனப்பகுதிகளில் முற்றாக அழிந்துவிடும் விபரீதம்தான் உருவாகும்.
மேகதாது அணைத்திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு கூறி இருக்கிறது. கர்நாடக மாநில அரசின் இத்திட்டம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்து மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் கர்நாடக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்த மேகதாது மின் உற்பத்தி திட்டம், சிவசமுத்திரம் அணை திட்டம், ஒகேனக்கல், ராசிமணல் நீர் மின் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்து, நிலுவையில் இருக்கிறது. மேற்கண்ட திட்டங்களை மத்திய அரசின் தேசிய நீர் மின் உற்பத்திக் கழகம் மூலம் செயற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது.
எனவே கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் கீழ், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகிய அமைப்புக்களை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்தினால்தான் கர்நாடக அரசின் முறைகேடான அணைத்திட்டங்களை தடுத்து நிறுத்த முடியும், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications