• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விருதுநகர் மாநாட்டில் வாஜ்பாயை புகழ்ந்த வைகோ: பாஜகவுடன் கூட்டணி?!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விருதுநகர்: யாரோடு கூட்டணி என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன் என்று விருதுநகர் மாநாட்டில் பொடி வைத்துப் பேசினார் வைகோ.

பிரம்மாண்டமான பந்தல்... லட்சக்கணக்கான தொண்டர்கள் என நேற்று களை கட்டிய மதிமுக மாநாட்டில் சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின.

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இந்த மாநாட்டில் வைகோ அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் எதிரியின் வியூகத்தைப் பொறுத்தே நாம் வியூகம் அமைப்போம் என்று கூறி சஸ்பென்ஸ் வைத்து முடித்தார் வைகோ.

மாலை, மரியாதை

மாலை, மரியாதை

மாநாடு தொடங்கிய உடன் பந்தல் முன்பு அமைக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். தொண்டர் படை சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

புத்தக வெளியீடு

புத்தக வெளியீடு

மேடையில் வைகோ அமர்ந்திருந்த இடத்திற்குப்பின், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இருந்தது. சாஞ்சி பரணி, தமிழ்நாட்டின் கதை, தீண்டாத காதல், நடுங்காத மனங்கள் உள்ளிட்ட புத்தகங்களை, வைகோ வெளியிட்டார்.

செங்கோலுக்கு மறுப்பு

செங்கோலுக்கு மறுப்பு

மதுரை டாக்டர் சரவணன் பேசும்போது, வைகோவை, சிங்கம், புலி எனப் புகழ்ந்தார். அதைக்கேட்டு வைகோ புன்னகைத்தார். அவர் பரிசாக தந்த ஆளுயர செங்கோலை, வைகோ ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், டாக்டர் ரொஹையா, தன் தந்தையின் நினைவாக வழங்கிய தங்கச் சங்கிலியை, வைகோ ஏற்றுக்கொண்டார்

விருதுநகரில் போட்டி

விருதுநகரில் போட்டி

."விருதுநகர் லோக்சபா தொகுதியில், வைகோ போட்டியிட வேண்டும். லோக்சபாவில், தமிழகத்தின் குரலை, அவர் ஒலிக்க வேண்டும்' என, மாநாட்டில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

வாஜ்பாய்க்கு புகழாரம்

வாஜ்பாய்க்கு புகழாரம்

மாநாட்டில் பேசிய வைகோ முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், ஒரு நாள் இரவு எனது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் ஆண்டன் பாலசிங்கம் பேசினார். விடுதலைப் புலிகளின் கப்பலை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இது குறித்து பிரபாகரன் உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றார்.

உடனே மறுநாள் காலை டெல்லி விரைந்து பிரதமர் அலுவலகத்தில் வாஜ்பாயை சந்தித்துப் பேசினேன்.

லைப்லைனை முறிக்கிறீர்கள்...

லைப்லைனை முறிக்கிறீர்கள்...

இலங்கை அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆயுதங்கள் தருகின்றன. புலிகள் தாங்களாகவே ஆயுதங்களைத் திரட்டி போரிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரே வழி கடல் தான். அதை எப்படி நீங்கள் தடுக்கலாம். இந்தியாவும் ஆயுதம் தராது.. அவர்களாக திரட்டி போரிட்டாலும் அதை ஏன் தடுக்கிறீர்கள். அவர்களது லைப் லைன் அது தான். அதை எப்படி தடுக்கலாம் என்றேன்.

வாஜ்பாயின் உதவி...

வாஜ்பாயின் உதவி...

நான் கோபமாகப் பேசப் பேச அதை கூர்ந்து கவனித்த வாஜ்பாய், டிட் யு ஸ்பீக் அபவுட் திஸ் டூ ஜார்ஜ் (பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்) என்று கேட்டார். நேற்றிரவே அவருடன் பேசிவிட்டேன். உங்களையும் நேரில் பார்த்து புகார் சொல்லப் போகிறேன் என்று கூறிவிட்டுத் தான் வந்தேன் என்றேன்.

இதையடுத்து புன்முறுவலுடன் தலையை ஆட்டிவிட்டு, ஐ வில் டேக் கேர் வைகோ, டோன்ட் ஒர்ரி என்றார். இதன் பிறகு புலிகளின் கப்பல்களுக்கு இந்தியக் கடற்படையால் பிரச்சனையே வந்ததில்லை. அந்த அளவுக்கு மனிதாபிமானம் காட்டினார் வாஜ்பாய்.

மகன் போல நடத்திய வாஜ்பாய்...

மகன் போல நடத்திய வாஜ்பாய்...

ஒருமுறை இந்தியாவிடம் இலங்கை ஆயுதம் கோரியது. இதையடுத்து உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றேன். என்னை மகன் போல நடத்திய வாஜ்பாய் உடனே அதைக் கூட்டினார். அதில் இலங்கையில் தமிழர்கள் படும்பாட்டை விளக்கினேனே. சோனியா, மன்மோகன் சிங்கெல்லாம் அதில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களை அழைத்த வாஜ்பாய், இலங்கைக்கு இந்தியா ஆயுதம் தராது என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆயுதங்களை விற்கக் கூட மாட்டோம் என்று அறிவித்தார்.

நெய்வேலி நிலக்கரி விவகாரம்...

நெய்வேலி நிலக்கரி விவகாரம்...

அதே போல நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டபோது வாஜ்பாயின் வீட்டுக்கு ஓடினேன். எல்லா முடிவும் எடுத்தாச்சே வைகோ என்றார். நீங்கள் நினைத்தால் அதைத் தடுக்கலாம்.. என்னை மகன் மாதிரி என்றீர்களே.. இது தமிழர்களின் சொத்து. இதைக் காக்க வேண்டும். இதை எனது மன்றாடலாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

ஓ.கே. வைகோ, அதை தனியாருக்கு விற்க மாட்டோம் என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தார். இதை பிரஸ்சுக்கு சொல்லலாமே என்று கேட்டேன். தாராளமாய் சொல்லுங்கள் என்று சிரித்தார். தனியார்மயமாக்கும் திட்டத்தை தூக்கி வீசச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டார்.

காமராஜர் நினைவுமண்டபம்:

காமராஜர் நினைவுமண்டபம்:

குமரியில் காமராஜருக்கு நினைவுமண்டபம் எழுப்ப மத்திய சுற்றுச்சூழல்துறையில் இருந்து பிரச்சனை வந்தபோது வாஜ்பாயிடம் தான் சென்றேன். என்ன, மாபெரும் தலைவர் காமராஜரின் நினைவு மண்டபத்துக்கு தடையா என்று கோபத்துடன் கேட்டவர் அதிகாரிகளை அழைத்து உடனடியாக அனுமதி தர உத்தரவிட்டார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியபோது, நீதிமன்றத்தில் நாங்கள் பதில் சொல்லிக் கொள்வோம். முதலில் அனுமதி கொடுங்கள் என்றார். 2 நாட்கள் கழித்து பிரிஜேஷ் மிஸ்ராவைக் கூப்பிட்டு, ஆணை போட்டாச்சா.. வைகோவிடம் சொல்லியாச்சா என்று கேட்டவர் வாஜ்பாய்.

11 மாதத்தில் கவிழ்த்தனர்...

11 மாதத்தில் கவிழ்த்தனர்...

முதலில் வாஜ்பாயின் ஆட்சியை 11 மாதத்தில் கவிழ்த்து விட்டனர். அதே வாஜ்பாய் 5 ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார் என்றார் வைகோ.

திமுகாவுக்கு வசை

திமுகாவுக்கு வசை

கூட்டணி பற்றி பேசிய வைகோ, திமுகவை ஒரு பிடி பிடித்தார். கருணாநிதி பாம்புக்கு தலையைக் காட்டுவார், மீனுக்கு வாலைக் காட்டுவார். முயலுடனும் ஓடுவார், அதை வேட்டையாடுபவனுடனும் ஓடுவார். முயலைக் காப்பாற்றுவதுபோல, அதனை வேட்டையாடி வருபவனுக்கும் உதவுவார். "ஈழம்' ஆதரவு என்பார்; திடீரென அதனை மாற்றுவார். சுயமரியாதை குறித்து மாற்றிமாற்றி பேசுவார் அவர் சரியான சித்து வேலைக்காரர் என்றார். இதன் மூலம் திமுக உடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக தொண்டர்களுக்கும், அனைவருக்கும் உணர்த்தினார் வைகோ.

அதிமுகவிற்கு கொஞ்சம்தான்

அதிமுகவிற்கு கொஞ்சம்தான்

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது மதிமுக. கடைசியில் வெளியேற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கினார்கள். இதை நினைவுபடுத்திப் பேசிய வைகே, சட்டமன்ற தேர்தலின் போது, சட்டசபைக்குள் ம.தி.மு.க நுழைந்துவிடக்கூடாது என்பதற்காகவே, திட்டமிட்டு செய்ததை புரிந்து கொண்டோம்; நம்ப வைத்து கழுத்தறுத்த அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். எங்களுக்கு சுயமரியாதைதான் முக்கியம் என்று கூறினார். ஆனாலும் ஆட்சியைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ அதிகம் விமர்சிக்கவில்லை.

எதிரியின் வியூகம்

எதிரியின் வியூகம்

எதிரி எந்த காயை நகர்த்துகிறார் என்பதை பார்த்து, அதற்கு ஏற்ப நாம் காய் நகர்த்துவோம். அதற்கு ஏற்ப, கூட்டணி வியூகம் இருக்கும். எதிரி சர்ப்ப வியூகம் வகுத்தால், நாங்கள் கருட வியூகம் வகுப்போம் என்று கூறிய வைகோ, மதிமுகவிற்கு யார் எதிரி? யார் நண்பன், யாருடன் சேர்ந்து வியூகம் அமைக்கப் போகிறார் என்பதை கடைசி வரைக்கும் கூறவில்லை.

தேர்தலில் போட்டி உறுதி

தேர்தலில் போட்டி உறுதி

மொத்தத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லிக்குப் போவது உறுதி என்று கூறிய வைகோ, இப்போதிருந்தே களப்பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு உற்சாகமளித்துள்ளார். யாரோடு கூட்டணி என்பது எனக்கும், எனது கட்சி தொண்டர்களுக்கும் மறைமுகமாக தெரியும். சரியான நேரம் வரும் போது அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் வைகோ.

வாஜ்பாயை அவர் புகழ்ந்ததைப் பார்த்தால், பாஜக கூட்டணிக்கு வைகோ முயலலாம் என்றே தெரிகிறது. ஆனால், இக் கூட்டத்தில் நரேந்திர மோடி குறித்து ஏதும் வைகோ பேசவில்லை.

English summary
MDMK chief Vaiko has hailed the BJP veteran Vajpayee in his party's Viruthunagar conference
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X