Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியில் குதித்த வைகோ!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அணையின் தூர் வாரும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும். இல்லாதபட்சத்தில் விவசாயிகளுடன் நாங்களே களம் இறங்குவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 1873ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 560 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றுவருகிறது. அணையை நம்பி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், அணையின் குடிநீரை நம்பி லட்சக்கணக்கான மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

Vaiko inspects Srivaikundam dam cleaning works

சுமார் 139 வருடங்களாக போதிய பராமரிப்பில்லாமல் தூர்ந்து மண்மேடாகிய ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரவேண்டும் என்று கடந்த 70ஆண்டுகாலமாக விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அணையை தூர் வாருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவே இல்லை.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையை வரும் 2015ம் ஆண்டின் மழைக்காலத்திற்கு முன்பாக தூர் வார உத்தரவிடக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனையின்பேரில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல் தொடர்ந்த வழக்கில் அணையை தூர் வார பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகள் கடந்த 30ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 7வது நாளாக சுப்பிரமணியபுரம் பகுதியில் நடந்து வரும் தூர் வாரும் பணிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக மாவட்ட செயலாளர்கள் ஜோயல், சரவணன், பெருமாள் மற்றும் விவசாயிகளுடன் இன்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து வைகை செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணையின் மூலமாக 25ஆயிரத்து 560ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத ஸ்ரீவைகுண்டம் அணை தூர்ந்து மண்மேடாகி விட்டது. 8 அடி ஆழம் கொண்ட அணையில் தற்போது முக்கால் அடி தண்ணீரைத்தான் தேக்கி வைக்க முடியும். இதனால் வருடம்தோறும் 20டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதனால் முப்போக விவசாயம் ஒரு போகமாக மாறிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டு வேதனைக்குள்ளான விவசாயிகள், அய்யா நயினார்குலசேகரன் தலைமையில் எங்களிடம் அணையை தூர் வாருவதற்கு உரிய முயற்சி எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நாங்களும் இந்த அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2011ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதாக சொன்னார்கள். ஆனால் இதில் எந்தப்பணியும் நடைபெறவில்லை. இதனைத்தொடர்ந்து தம்பி ஜோயல் இதுதொடர்பான பொதுநல வழக்கினை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எனது ஆலோசனையின்பேரில் தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது.

தீர்ப்பாயத்தில் ஆஜரான தமிழக அரசு ''ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரவேண்டும் என்றால் அங்கிருக்கும் மரங்களை வெட்டவேண்டும், மரங்களை வெட்ட மத்திய அரசு அனுமதி தர மறுக்கிறது'' என்று சொன்னார்கள். இப்படியாக மத்திய அரசும், மாநில அரசும் மாறி மாறி சொல்லிய பொய்யான காரணங்களை பசுமை தீர்ப்பாய அமர்வு ஏற்கவில்லை.

வழக்கு தொடுத்தவர்கள் அணையை தூர் வாரவேண்டும் என்று தான் சொல்கிறார்கள், மரங்களை வெட்டவேண்டும் என்று யாரும் கேட்க்கவில்லை, நாங்களும் மரங்களை வெட்ட சொல்லவில்லை என்று நீதிமன்றத்தினர் சொன்னார்கள். இப்படியாக நடந்த வழக்கு ஜுன் 5ம் தேதி புதுடெல்லியிலுள்ள விடுமுறைகால தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது.

இதில் நீதிபதி ஜோதிமணி, நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் யூசுப் அடங்கிய அமர்வு ஜூன் 10ம் தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கிடவேண்டும், அப்படி அனுமதி வழங்காதபட்சத்தில் ஜூன் 11ம் தேதி தமிழக அரசு ஸ்ரீவைகுண்டம் அணையின் தூர் வாரும் பணிகளை துவங்கலாம் என்று தீர்ப்பளித்தனர்.

ஆனால் எதிர்பார்த்தபடி ஜூன் 11ம் தேதி ஜெயலலிதா அரசு தூர் வாரும் பணிகளை துவங்கவில்லை. பொதுப்பணித்துறைக்கோ, கலெக்டருக்கோ தூர் வாருவதற்கான உத்தரவினை இந்த அரசாங்கம் பிறப்பிக்கவில்லை. இப்படியே போனால் பருவமழைக்காலம் வந்துவிடும் அதனையே காரணம் காட்டி அணையின் தூர் வாரும் பணிகளை கிடப்பில் போட்டுவிடலாம் என்று இந்த அரசாங்கம் அமைதியாக இருந்துவிட்டது.

கலெக்டரை பார்த்து அணையை தூர் வாரும் பணி தொடர்பாக நாங்கள் விவசாயிகளுடன் சென்று கேட்டதற்கு அவரோ ''அரசாங்கம் எனக்கு உத்தரவு போடவில்லை'' என்று சொல்லிவிட்டார். அணையை இன்று தூர் வாருவார்கள், நாளை தூர் வாருவார்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாந்து போனார்கள். இதனைக்கண்ட நான் கடந்த 28ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அணையை வந்து பார்வையிட்டேன்.

இந்த அரசாங்கம் எதுவும் செய்யாது, விவசாயிகள் மீது இந்த அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை. எனவே வீட்டுக்கு ஒரு விவசாயி என்ற ரீதியில் எல்லோரும் அரிவாள், கோடாரி, கடப்பாரை, இரும்புசட்டியுடன் திரண்டு வாருங்கள், எந்திரங்களுடன் நாமே களம் இறங்குவோம், எனது தலைமையில் அணையை தூர் வாருவோம் என்று அறிவித்தேன். ஏனென்றால் இங்கே பாதிக்கப்பட்ட விவசாயிகள் இருக்கிறார்கள்.

இவர்களாவது பாதிக்கப்பட்ட விவசாயிகள் தான், ஆனார் நானோ நொடிந்து நொந்துபோன விவசாயி. இவர்களுக்காவது இங்கே தண்ணீர் இருக்கிறது, நானோ வானம் பார்த்த விவசாயியாக இருக்கிறேன். விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 10ஆயிரம் விவசாயிகளை திரட்டி எனது தலைமையிலேயே ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கு திட்டம் போட்டேன். தமிழ்நாடு முழுவதும் எனது தலைமையில் திரண்டு வரும் விவசாயிகளை காவல்துறையால் தடுக்க முடியாது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான அறிக்கையை இந்த அரசாங்கம் ஜூலை 1ம் தேதி தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்பது விதிமுறையாகும். இந்தநேரத்தில் இந்த அரசாங்கத்திற்கு திடீரென்று ஞானயோதயம் ஏற்பட்டு ஜூன் 30ம் தேதி மாலையிலேயே அணையை தூர் வார பூமி பூஜை போட்டு விட்டது. அது என்ன பூமி பூஜை, அணையை தூர் வாரவேண்டியது தானே.

Vaiko inspects Srivaikundam dam cleaning works

இந்த அம்மாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் ஜெயில்லே இருந்தப்ப இந்த அதிமுகவினர் எல்லாம் கோவில் கோவிலா போய் பிரார்த்தணை பண்ணுனாங்க, அது மாதிரி இதுக்கும் பூஜை போட்டுருங்காங்க. பூஜை போட்டுட்டோம் இனி மழை வந்துரும் அப்படின்னு தீர்ப்பாயத்திலே சொல்லிடலாம் என்பது அவங்களோட திட்டம். ஏன்னா அணையை தூர் வாரினால் பேரெல்லாம் இந்த வைகோவிற்கும், மதிமுகவிற்கும் போய் சேர்ந்துடும் என்பது அவங்களுக்கு நல்லா தெரியும். ஆனால் பசுமை தீர்ப்பாயம் மழை வந்தாலும் தூர் வாரும் பணிகள் நடக்கவேண்டும்.

தற்போது ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகள் துவங்கப்பட்டாலும் அதில் வேகம் எதுவும் இல்லை. வெறும் 4 பொக்லைன் தான் இருக்கு. 10பொக்லைனாவது தூர் வார வரணும். ஒருவேளை ஆற்றிலுள்ள மணலை எடுக்க எடுக்கத்தான் வேகம் அதிகமாகும் என்று நினைக்கிறேன். ஏன்னா மணல் மூலமாக இந்த அரசாங்கத்திற்கு ஏகப்பட்ட வருமானம் வரப்போகுது.

அணையின் தூர் வாரும் பணிகளை விவசாயிகள், மதிமுகவினர் தினமும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இந்தப்பணியில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால், நாங்களே களம் இறங்கிடுவோம். இந்த அணையை தூர் வாரி ஆழப்படுத்தினால் 8அடி தண்ணீரை தேக்கி வைத்து மூன்றுபோகத்திற்கு பயன்படுத்தமுடியும். இதன்மூலம் இந்த அரசாங்கத்துக்கு நல்லபேருதான் கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

முல்லைபெரியாறு, அமராவதி, காவரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என இந்த மக்களுக்காக மதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்காக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் மூலமாக பசுமை தீர்ப்பாயம் தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி தூர்ந்துபோன நீர் நிலைகளை எல்லாம் தூர் வாரவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கேற்ப தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை இந்த அரசாங்கம் தூர்வாரவேண்டும். இல்லாவிட்டால் குடிமராமத்து பணி என்ற ரீதியில் நாங்களே விவசாயிகளுடன் களம் இறங்குவோம்.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கான நல்ல தீர்ப்பை பெற்று தந்ததற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயிகள் வரும் 17ம் தேதி தம்பி ஜோயலுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பாராட்டு விழா வைத்துள்ளார்கள். எங்களை பொறுத்தவரை இது பாராட்டு விழா என்பது அணையின் தூர் வாரும் பணிகள் எல்லாம் முடிந்த பிறகுதான், இருந்தாலும் இந்த விழாவை நாங்கள் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டமாக நடத்த இருக்கிறோம். இதில் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை தூர் வாருவது தொடர்பான போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

ஸ்ரீவைகுண்டம் அணையை பொறுத்தவரை 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த அரசாங்கம் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். இதன்படி வரும் 16ம் தேதி தீர்ப்பாயத்தில் வாய்தா வருகிறது. இந்த அரசாங்கம் பணிகள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். எங்கள் தரப்பில் நாங்களும் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை தூர் வாரும் பணியில் எந்தவித தாமதம் ஏற்பட்டாலும், விவசாயிகளுடன் நாங்களே களம் இறங்குவோம் என்பதை இந்த அரசாங்கத்திற்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முன்னதாக தாமிரபரணி ஆற்றில் உள்ளே தண்ணீருக்குள் இறங்கி நடந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2004ம் ஆண்டு நதிகள் இணைப்பு, மது ஒழிப்பு நடைபயணம் சென்றபோது தாமிரபரணியில் நீராடிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன், அது வெற்றிகரமாக முடிந்தது. அதுபோன்று 11ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தாமிரபரணியில் இறங்கியுள்ளேன், இதிலும் நிச்சயமாக வெற்றி பெறுவேன் அதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.

Vaiko inspects Srivaikundam dam cleaning works

அணையின் தூர் வாரும் பணிகளை பார்வையிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றுக்குள்ளும், சகதிக்குள்ளும், அமலைசெடிகளுக்குள்ளும் எந்த வித அச்சமும்இன்றி கடகடவென்று இறங்கி சென்று பார்வையிட்டார். தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திர டிரைவர்களிடம் நலம் விசாரித்த வைகோ இயந்திரத்தில் ஏறி அமர்ந்து அதனை இயக்கியும் பார்த்தார். அணையின் தூர் வாரும் பணிகளை பார்வையிட வந்த விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+