நாகர்கோவில்: ஏழைகளின் பட்டா நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வைகோ கடும் எதிர்ப்பு
சென்னை: நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெரியவிளை, தட்டான்விளை, ஏர் கேம்ப் ரோடு பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களின் பட்டா நிலங்களையும், பெரிய விளை ஊர் சாமக் கொடைக்கார சுவாமி கோவிலுக்கு உரிய பட்டா பூமியையும், ஊர் பூமி, கல்லறை பூமி மற்றும் ஏர் கேம்ப் சாலையில் உள்ள பட்டா பூமியையும், பொதுமக்கள் வீடுகள் அமைந்த பகுதியையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1982-ஆம் ஆண்டு முதல் கையகப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்த்து சுமார் 32 ஆண்டுகளாக நில உரிமையாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.

நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், இப்பகுதி நிலங்களை ஆர்ஜிதம் செய்திடக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 2001-ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அகத்தீஸ்வரம் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு, நில ஆர்ஜிதம் செய்யக் கூடாது என முடிவுகளை அறிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் ஏற்கப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
2009-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பாÞகர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவும் இப்பகுதியில் நில ஆர்ஜிதத்தைக் கைவிட அரசுக்குப் பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பித்தது. தமிழக அரசும், வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திப் பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை நில உடமையாளருக்கே திருப்பிக் கொடுக்கப்படும் என அறிவித்தது. இப்பகுதியில் ஒரு செண்டின் இன்றைய மதிப்பு ரூ. 10 லட்சம் முதல் 15 லட்சம் ஆகும். ஆனால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மதிப்பீடு ரூபாய் ஓராயிரத்து இருநூறு மட்டுமே ஆகும்.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள். இடம் உரிமையாளர்களின் அனுபவத்திலேயே இருந்து வருகிறது. பலரும் வீடுகட்டி குடியிருக்கிறார்கள். கல்லறைத் தோட்டங்களும், திருக்கோவில்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன; குடியிருப்புகள் மற்றும் கடைகள் நிரம்பியுள்ளன.
சட்டப்படி மக்களுக்கு முழு உரிமை உள்ள பூமியை அத்துமீறி கையகப்படுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் அவர்களையும், பொதுமக்களையும் மற்றும் வழக்கறிஞர்களையும் மிரட்டிய நாகர்கோவில் சராக துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கைக் கோரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்து போராடி வருவகிறது. அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொது மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்பகுதி பூமியைக் கையகப்படுத்த முனையும் வீட்டுவசதி வாரியத்தின் முயற்சிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கைவிடச் செய்திட வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications