ஒரு புரட்சிப் புயல் தரை தட்டிப் போன கதை!
-ஆர்.மணி
அதாகப்பட்டது நம்முடைய புரட்சிப் புயல், மறுமலர்ச்சி திராவிடக் கழகத்தின் (நிரந்தர) பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் ஒரு சூறாவளியை கிளப்பியிருக்கிறார். கடைசி நேரத்தில் வைகோ தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்.
திங்கட்கிழமை கோவில்பட்டி தொகுதியில் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வைகோ கிளம்பிய போதே பிரச்சனை கிளம்பியது. அவர் தங்கியிருந்த டிராவலர்ஸ் பங்காளவுக்கு எதிரேயே கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதற்கு முந்தய நாள் ஞாயிற்றுக் கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வைகோ போனபோது அங்கு கூடியிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிறு கும்பல் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியது. திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

உடுமலைப் பேட்டையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மரணத்துக்குப் பிறகு வைகோ தலித்துக்களுக்கு ஆதரவாக பேசி வருவது கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் தேவர் மற்றும் இதர ஆதிக்க ஜாதியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில் கோவில்பட்டியில் தேவர் சமூகத்தைச் சார்ந்த திமுக வேட்பாளரின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது என்று வைகோ கூறுகிறார். ஆகவே தேவர் மற்றும் நாயக்கர் சமூகத்தினைச் சார்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை காப்பாற்றும் வகையிலும் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுவதாக வைகோ அறிவித்துவிட்டார்.
வேட்பு மனு தாக்கலுக்கு புறப்பட்ட வைகோ தான் போட்டியிடப் போவதில்லை என்ற தகவலை யாரிடமும், தன்னுடைய சொந்த கட்சிக்காரர்கள் மத்தியிலும் கூடத் தெரிவிக்கவில்லை. உள்ளே போன பிறகுதான் எதிர்பாராத திடீர் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. தனக்குப் பதிலாக வினாயக் ரமேஷ் என்பவரை வேட்பாளராக வைகோ அறிவித்துவிட்டார். வெளியே வந்து கூடியிருக்கும் மீடியாக்களிடம் வைகோ இதனை கூறிய பிறகுதான் இந்த விஷயம் மற்றவர்கள் அனைவருக்கும் தெரிந்தது.
எல்லா கட்சிகளிலும்- அஇஅதிமுக, திமுக, பாமக- என்று எந்த கட்சியானாலும் அந்தக் கட்சியின் தலைவர்கள்- ஜெயலலிதாவோ, கருணாநிதியோ அல்லது ஜி.கே.மணியோ- அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை பட்டியிலில் இருந்து எடுத்து விடுவார்கள், மாற்றி விடுவார்கள். ஆனால் வைகோ ஒருவர்தான் தன்னுடைய பெயரை தானே பட்டியிலில் இருந்து மாற்றி விட்டார். இதுவும் சத்தியமாக ஒருவித புரட்சிதான்.
என்னதான் ஆயிற்று வைகோவுக்கு? தமிழ்நாட்டின் பொது வாழ்வில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழுத்த அனுபவம் கொண்டவர் வைகோ. 24 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர். பத்து பிரதமர்களுடன் நேரடியாக பரிச்சயம் கொண்டவர். தேசிய அளவில் தலைவராகப் பார்க்கப்படுபவர். ஆம்... இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி என்று பத்து பிரதமர்களுடன் நேரடியாகப் பழகியவர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைகோ வந்தால் பல கட்சிகளின் எம்பிக்களும் அவரை சூழ்ந்து கொள்ளுவார்கள். காங்கிரஸ் கட்சியிலும் அவருக்கு பல ரசிகர்கள் உண்டு.

1989- 90 கால கட்டத்தில் இலங்கைக்கு ரகசியமாக போய் விட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் வந்த முதல் நாள் அவருக்கு மேஜையை தட்டி வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது விபி.சிங் ஆட்சி. இங்கு கருணாநிதி ஆட்சி. இவ்வாறு நாடாளுமன்றத்தில் மேஜையைத் தட்டி வரவேற்பு கொடுத்தவர்களில் காங்கிரஸ் எம்பிக்களும் அடக்கம் என்பதுதான் கூடுதலான் சுவாரஸ்யம்.
1993ல் கொலைப் பழி சுமத்தப்பட்டு திமுகவிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டதெல்லாம் பழங்கதை. ஆனால் ஒவ்வோர் முறையும் சட்டமன்றத் தேர்தலின் போது மட்டும் வைகோவுக்கு என்ன ஆகிறது என்று தான் புரியவில்லை.
1996 மதிமுக சந்தித்த முதல் தேர்தல். அப்போது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒன்றாக வந்தன. மதிமுக- சிபிஎம் கூட்டணி. பின்னர் நடைபெற்ற ஐந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் வைகோ இரண்டில்- 1999, 2004 - திமுக கூட்டணியிலும், இரண்டில் 1998, 2009ல்- அஇஅதிமுகவுடனும், 2014ல் பாஜக கூட்டணியிலும் இருந்தார். அதாவது நாடாளுமன்ற தேர்தல்களில் ஏதாவது ஒரு கூட்டணியில் சரியாகப் பொருந்திப் போகிறார். பிரச்சனையே சட்ட மன்றத் தேர்தல்களில்தான். 2001ல் கடைசி நேரத்தில் கருணாநிதி, என்டிஏவில் வைகோவுக்கு இடமில்லை என்று சொல்லி கழற்றி விட்டது மதிமுகவை கதிகலங்க வைத்தது. தனியாக நின்று தோற்றது மதிமுக.
2006ல் கடைசி நிமிடம் வரையிலும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு இறுதி கட்டத்தில் அஇஅதிமுகவுடன் சேர்ந்தார். ஆறு எம்எல்ஏக்களை வென்று, அதில் மூன்றை திமுகவிடம் கோட்டை விட்டார்.
2011ல் கடைசி நேரத்தில் ஜெ கழுத்தறுத்ததால் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை எடுத்தார் வைகோ.
தேர்தல் அரசியிலில் இருக்கும் ஒரு கட்சி, 50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக் காரரான ஒரு தலைவரை பொதுச் செயலாளராக கொண்ட ஒரு கட்சி ஒரு தேர்தலை எப்படிப் புறக்கணிக்க முடியும் என்பது இன்றும், என்றும் அரசியலின் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது... இருக்கப் போகிறது.
2011ல் வைகோவின் கட்சி சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணித்தது. இன்று வைகோவே தேர்தலை புறக்கணிக்கிறார். தேர்தல் அரசியிலில் இருக்கும் ஒரு கட்சியின் கனவே தேர்தல்களில் வென்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். அதுவே ஒரு கட்சிக்கு பாரமாக இருக்கிறதா? அப்படியென்றால் அந்தக் கட்சியின் நோக்கங்கள் தான் என்னவாக இருக்க முடியும்? தேர்தல் பாதை திருடர்கள் பாதை, மக்கள் பாதை புரட்சிப் பாதை என்று கோஷமிடும் மாவோயிஸ்டுகள் தேர்தலைப் புறக்கணித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் மதிமுக மாதிரியான கட்சிகள் தேர்தலையே எப்படிப் புறக்கணிக்க முடியும்? தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் சூழலில் வைகோ, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்.
இது எத்தகைய பாதிப்பை அவரது கட்சிக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் ஏற்படுத்தும் என்பதை யோசிக்கவில்லையா அவர்? மதிமுக தொண்டர்களுக்கு இவையெல்லாம் பழகிய விஷயங்களாக இருக்கலாம். ஆனால் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பதால் மற்ற கட்சிகளிடம் இது எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறதோ?
ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் மாற்றாக நாங்கள் வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு களம் கண்ட ஒரு அரசியல் அணியின் ஒருங்கிணைப்பாளர் சட்டமன்றத் தேர்தலில் இருந்து விலகுவது என்ன செய்தியை மக்களுக்கு சொல்லுகிறது? தோல்வி பயத்தின் காரணமாகவே, வைகோ தேர்தலிலிருந்து போட்டியிடாமல் விலகி விட்டார் என்ற பரவலான கருத்தின் நியாயமும், தர்க்கமும் அவ்வளவு சுலபத்தில் ஒதுக்கித் தள்ளி விட முடியாதது.
இந்த நேரத்தில் நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புவது... திமுக மீதான வைகோவின் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையைப் பற்றி. வைகோவின் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகள் இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். ஒரு வாதத்திற்கு வைகோவின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று வைத்துக் கொண்டே பேசலாம்.
தேவர் - நாயக்கர் மோதலை திமுக தூண்ட எத்தணிப்பது உண்மையானால், அதற்கான எதிர் வினை தேர்தலில் இருந்து வைகோ விலகுவதா...? அப்படியென்றால் நாளைக்கு தமிழகத்தின் வேறு பல பகுதிகளில் இதே போன்ற கலவரங்களுக்கு திமுக அடிகோலுகிறது என்ற தகவல் வந்தால், மேலும் பல வேட்பாளர்களை வைகோ மாற்றுவாரா அல்லது நிரந்தர தீர்வாக 2011ல் செய்தது போல தேர்தலையே மதிமுக புறக்கணிக்குமா? கலவரங்களை எதிர்கட்சிகள் தூண்டுகின்றன என்ற காரணத்தால் ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என்றால் அந்தக் கட்சி தேர்தல் அரசியலில் இருந்தே முற்றிலுமாக அகன்று போக வேண்டும். அதைத்தான் வைகோ மனதில் கொண்டிருக்கிறாரோ?
இதில் இன்னோர் முக்கியமான விவகாரம். திங்கட்கிழமை மற்றும் அதற்கு முந்தைய நாள் வைகோவுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தியவர்கள் நடிகர் கருணாசின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்கின்றன உள்ளூர் ஊடகங்கள். கருணாஸ் இன்று ஜெவுடன் இருக்கிறார். வைகோவுக்கு எதிராக போராடிய சமூகத்தினர் காலங்காலமாய் அஇஅதிமுகவின் வாக்கு வங்கியைச் சார்ந்தவர்கள். ஜாதியைச் சொல்லித் தான் வாக்குகளை வாங்குவது என்பதுதான் எல்லா கட்சிகளுமே காலங்காலமாய் செய்து வரக்கூடிய காரியம் எனும் போது இதில் புதிதாக வைகோ என்ன கண்டு விட்டார், தேர்தலில் இருந்து ஓடிப் போகும் அளவுக்கு?
விவகாரம் மதிமுக சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, அதாவது ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் மாற்று நாங்கள்தான் என்று வாய்ச் சவாடல் விட்டு தெருவில் இறங்யிருக்கும் மக்கள் நலக் கூட்டணியின் நம்பகத் தன்மையையும்தான் வைகோவின் முடிவு இன்று கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணி என்பது அஇஅதிமுகவின் பீ டீம் என்ற குற்றச் சாட்டுக்கு வைகோவின் முடிவு வலுச் சேர்க்கிறது என்பதை விவரமறிந்த தோழர்களும், சிறுத்தைகளும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
பொன் விழாவைத் தாண்டிய கட்சிகளில் இருந்து நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் இருக்கும் கட்சிகள் வரையில் குடும்ப அரசியலே கோலோச்சும் இன்றைய தமிழக அரசியலில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் எவரின் முகமும் வெளியுலகிற்குத் தெரியாமல் அரசியல் செய்பவர்தான் வைகோ. இவையெல்லாம் இன்றைய தமிழக அரசியலில் இன்று அருகிப் போன குணாம்சங்கள். அதே போல இலங்கை விவகாரத்திலும், விடுதலை புலிகள் விவகாரத்திலும் என்றுமே தன்னுடைய நிலைப்பாட்டை அவர் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் மாற்றக் கொண்டதில்லைதான். 19 மாதங்கள் ஜெயலலிதா பொடாவில் அவரை சிறையில் தள்ளிய போதும் வைகோ சற்றும் தன்னுடைய நிலைப் பாட்டிலிருந்து இறங்கி வரவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி சொன்னது போல வைகோவின் பலமும், பலவீனமும் அவருடைய பேச்சுத்தான். மற்றோர் பலவீனம் ஆனந்த விகடனில் திருமாவேலன் எழுதியது போல நல்ல காரியங்களை சத்தமில்லாமல் ரகசியமாகவும், தவறான காரியங்களை பெரிய வார்த்தைகளில் வெளிப்படையாகவும் செய்பவர்தான் வைகோ.
வைகோவின் இன்றைய அரசியல் ஒரு வித விரக்தி சார்ந்ததாக இருக்கிறது. அதுவும் கடந்த ஒரு மாதகாலமாக அவர் பேசுவது- சிறுதாவூரில் 1,200 கோடி பதுக்கல், விஜயகாந்துக்கு கருணாநிதி 500 கோடி கொடுப்பதாக துண்டுச் சீட்டு கொடுத்தார், தேமுதிக சந்திரகுமாருக்கும் மற்றவர்களுக்கும் தலா 3 கோடி, 2ஜி வழக்கில் கனிமொழி சிக்க வைக்கப்பட்டார், ஸ்டாலின்தான் முக்கிய குற்றவாளி- போன்ற பேச்சுக்கள் எல்லாமே எந்த அடிப்படையிலான பேச்சுக்கள் என்பது வைகோவுக்கு மட்டும் தான் வெளிச்சம்.
விரக்தியே அரசியிலின் அடிப்படையானால் அது அந்த குறிப்பிட்ட அரசியல்வாதிக்கும் நல்லது பயக்காது. அவர் சார்ந்திருக்கும் கட்சிக்கும் நன்மை பயக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது தான் தற்போதைக்கு அரசியலில் மூத்த தலைவரான வைகோவின் நிலையாகவும், மதிமுகவின் நிலைமையாகவும் இருக்கிறது. தான் உதிரம் சிந்தி உழைத்த கட்சியின் குடும்ப அரசியலினால் பழி வாங்கப்பட்ட வைகோ இன்று போகப் போகும் திசை என்னவென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்!












Click it and Unblock the Notifications