For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழு பேர் விடுதலையில் கருணாநிதி - ஜெயலலிதாவின் கபட நாடகங்களை மக்கள் அறிவார்கள்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நளினி உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்ய சட்ட ரீதியான உரிமை உள்ள போதும், தலைமைச் செயலாளர் மூலம் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் ஏமாற்று வேலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி, வேலூர் சிறையிலிருந்து பரோலில் வந்த நளினி மறைந்த தனது தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டார். பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபோது என்ன பேசினார் என்று கேட்டதற்கு, "அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து கிளம்பும்போது எனக்கு எந்த வசதியும் செய்து தரக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்" என்று அதிர்ச்சித் தகவலை கூறியிருக்கிறார் நளினி.

Vaiko's slam on Jaya and karunanidhi on 7 Tamils release

சிறை விதிகளையும், சட்ட மரபுகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, அன்றைய முதல்வர் கருணாநிதி, பிரியங்கா வேலூர் சிறையில் நளினியைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தார். 2008 மார்ச் 19 ஆம் தேதி வேலூர் சிறையில் நளினி - பிரியங்கா சந்திப்பு நடந்தது. ஆனால் பதிவேட்டில் அன்றைய தேதியில் பிரியங்கா, நளினியை சந்தித்த எந்தக் குறிப்பும் இல்லை. அப்போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பெற்று இருந்தது. அதிகாரம் தங்கள் காலடியில் என்ற மமதையுடன் சட்டத்தை மீறி பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து ரகசியமாக நளினியைச் சந்திப்பதற்கு கருணாநிதி அனுமதி வழங்கினார்.

வேலூர் சிறைக்கு பிரியங்கா வந்திருந்தபோது அனைத்துக் கைதிகளையும் நடமாட விடாமல் சிறையில் அடைதுவிட்டு, திடீரென்று நளினியை சிறைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்தச் சென்று பிரியங்காவை சந்திக்க வைத்துள்ளனர். அப்போது நடந்ததையே நளினி தனது பேட்டியில் கூறி உள்ளார். சட்ட விரோதமாக வேலூர் சிறையில் நளினியைச் சந்தித்த பிரியங்கா, அவரை மிரட்டி, சிறைக்குள் கைதிகளுக்குரிய அடிப்படை உரிமைகளை கூட தரக்கூடாது என்று மனிதாபிமானம் இன்றி உத்தரவு போட்டிருக்கிறார்.

இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும். இந்த அக்கிரமத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி உடந்தையாக இருந்தார். எஜமானி சோனியாவின் மகள் பிரியங்கா உத்தரவு போட்டதை கருணாநிதி அரசு செயல்படுத்தியதின் விளைவாக, நளினி சிறையில் கொடூர சித்ரவதைகளை அனுபவிக்கும் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்துவிட்டுச் சென்ற பின்னர் ஈழத்தில் விடுதலைப் புலிகள் மீதான போர் தீவிரமடைந்தது. காங்கிரஸ் கூட்டணி அரசின் உதவியைப் பெற்று, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே.

தங்கள் மீது விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கருணை அடிப்படையில் இரத்து செய்து தங்களைக் காக்குமாறு நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்கள் அனுப்பி இருந்தனர். நளினிக்கு கருணை காட்டலாம் என்று சோனியாகாந்தி கருதுவதாகக் கூறி, நளினியின் மரண தண்டனையை மட்டும் இரத்து செய்வதற்கு தனது அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்த அன்றைய முதல்வர் கருணாநிதி, மற்ற மூவரின் தூக்குத் தண்டனை குறித்து எந்த முடிவும் எடுக்காமல், அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார்.

அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொண்டு நளினியின் மரண தண்டனையை மட்டும் இரத்துச் செய்து, மற்ற மூவரின் கோரிக்கை மனுக்களை ஏற்காததால், மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினார்கள்.

ஆனால், பின்னாளில் இவற்றை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எண்ணி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தற்போது ஆதரிக்கிறார். இப்படிப்பட்ட ஏமாற்று வேலை அவருக்கு கைவந்த கலை.

நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டபின்னர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் கைதியான தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு விண்ணப்பித்தார். 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன்னை விடுவிக்கக் கோரி நளினி வழக்குத் தொடர்ந்தார். இதற்கு பதிலளிக்காமல் கருணாநிதி அரசு இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்தது. அதன்பிறகு உயர்நீதிமன்றம் தலையிட்டு நளினி விடுதலை குறித்து பரிந்துரைக்க அறிவுரைக்குழு ஒன்றை அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருணாநிதி அரசு அறிவுரைக்குழு அமைத்தது. இக்குழு 2010 ஏப்ரலில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், "நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கிறது. நளினியின் பெற்றோர் சென்னையில் கங்கையம்மன் தெருவில் வசிக்கின்றார்கள்.

இது முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. அமெரிக்கத் தூதரகம் போன்ற முக்கியமான அலுவலகங்கள் உள்ளன. நளினி அங்கு சென்று தங்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும். 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது" என்றெல்லாம் காரணம் கூறி விடுதலையைத் தடுத்தது.

2010 இல் நளினியை விடுவிக்க முடியாது என்று கூறிய கருணாநிதிதான் இன்று நளினி உள்ளிட்ட 7 பேரை மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பதவியில் இருந்தபோதும், கருணாநிதி தமிழ்நாடு முதல்வர் பொறுப்பில் இருந்தபோதும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்கு எள்முனை அளவுகூட முயற்சிக்கவில்லை என்பதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.

நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தந்தையை கவனித்துக்கொள்ள ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். நளினியை பரோலில் செல்ல அனுமதித்தால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று ஜெயலலிதா அரசு பதில் மனுவில் கூறியது. தனது தந்தையைப் பார்ப்பதற்கு நளினி பரோல் கேட்டு விண்ணப்பித்த போதெல்லாம் ஜெயலலிதா அரசு அனுமதி மறுத்தது. ஜெயலலிதா அரசு மனிதாபிமானம் சிறிதும் இன்றி, தனது தந்தை உயிருடன் இருந்தபோது பார்ககும் வாய்ப்பைக்கூட 25 ஆண்டு காலம் சிறையில் வாடும் நளினிக்கு வழங்க மறுத்தது.

அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் கீழ் வேலூர் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்ய சட்ட ரீதியான உரிமை உள்ள போதும், தலைமைச் செயலாளர் மூலம் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் ஏமாற்று வேலை என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.

English summary
MDMK leader Vaiko has slammed CM Jayalalitha and DMK chief Karunanidhi on the release issue of 7 Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X