For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேல்நாட்டு மதுவை மையாக்கி அச்சிட்டு விஷம் கக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா.. வைகோ கடும் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கடற்கரை மதுக்கூடாரமாகவும் களியாட்ட முகாமாகவும் மாறுவது டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இனிக்கிறது. தமிழகம் எப்படியாவது சீரழியாதா என்ற நோக்கமும் தெரிகிறது. அதனால்தான், மேல்நாட்டு மதுவை மையாக்கி அச்சிட்டு மது விலக்கு மரத்தானைப் புழுதி வாரித் தூற்றி எழுதியிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் மதிமுக சார்பில் நடந்த மது விலக்கு மராத்தான் குறித்து விமர்சித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதற்கு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார் வைகோ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

மதுவின் பிடியில் சிக்கி நாசமாகும் தமிழகம்

மதுவின் பிடியில் சிக்கி நாசமாகும் தமிழகம்

மது எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கித் தமிழகம் நாசமாகிக் கொண்டு இருக்கின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்திற்கும் மது முக்கியக் காரணம் ஆகி விட்டது. அறநூல்களும், சான்றோரின் நெறிகளும், மதுவினால் சமுதாயத்திற்கு ஏற்படும் தீங்கான கேடுகளை எடுத்துக் கூறுகின்றன.

தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில்

தலைவர்கள் வாழ்ந்த தமிழகத்தில்

நாட்டு நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள், அறிஞர் அண்ணா, மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராசர் போன்றோர் தமிழகத்தில் மதுவை அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் கோடிக்கணக்கான தாய்மார்களின் துன்பக் கண்ணீருக்கு மதுவே காரணம். சின்னஞ்சிறுமிகளையும், பெண்களையும் நாசப்படுத்தி பல நேரங்களில் கொலையும் செய்யும் கொடியோர் பெரும்பாலும் மது அருந்தியோர்தான்.

அச்சமூட்டும் செய்தி

அச்சமூட்டும் செய்தி

பள்ளி மாணவர்கள் மத்தியிலும் மதுப்பழக்கம் என்ற செய்தி அச்சமூட்டுகிறது. பெண்மையைப் போற்றிய தமிழகத்தில், மேட்டுக்குடி மகளிரிடத்திலும் பரவத் தொடங்கி இருப்பது அபாயத்தின் அறிகுறி.

பதற்றமும், கவலையும்

பதற்றமும், கவலையும்

பாழும் நரகத்தில் தமிழகம் சிக்கி விடக் கூடாதே என்கின்ற பதற்றத்தாலும், கவலையாலும் நான் கடந்த பத்து ஆண்டுகளாக முழு மது விலக்கைத் தமிழகத்தில் அமுல்படுத்தவும், மதுவை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2004 ஆம் ஆண்டு 1200 கிலோமீட்டர் தொலைவும், 2013-14 ஆம் ஆண்டுகளில் 1500 கிலோ மீட்டர் தொலைவும், வெயிலிலும், மழையிலும் நடந்து, நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்களை, குறிப்பாக, தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திய தாய்மார்களைச் சந்தித்து, மதுவின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க, அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகின்றேன்.

அரசியல் பேசவில்லை

அரசியல் பேசவில்லை

எந்த இடத்திலும் அரசியல் பேசவில்லை; எங்கள் கட்சிக்கு ஆதரவு தேடவில்லை. மாணவர்களிடம் மது எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தினால்தான், தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியும் என்று தீர்மானித்து, 2014 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள், கோவை மாநகரில் நடத்திய மது ஒழிப்பு மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 12,000 பேர்களுள், 11,500 பேர் மாணவ, மாணவியர்கள் ஆவர். அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகளின் முதல்வர்களும், தலைமை ஆசிரியர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பு நல்கினர்.

கடந்த 35 நாட்களாக

கடந்த 35 நாட்களாக

அதன்பின் கடந்த 35 நாள்களாக, தலைநகர் சென்னையில், எங்கள் இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளர் தம்பி ஈஸ்வரன் அவர்கள் தலைமையில், 1000 பேர் ஓய்வு இன்றிப் பணியாற்றி, அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகளுக்கு நேரில் சென்று, மராத்தான் விண்ணப்பப் படிவங்களைத் தந்து, பதிவு எண் அட்டைகளையும் வழங்கி, 2015 ஜனவரி 4 ஆம் நாள், மது ஒழிப்பு மராத்தான் ஓட்டத்தை ஏற்பாடு செய்தோம். மாணவ, மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு விண்ணப்பங்களை நிரப்பித் தந்தது திகைக்க வைத்தது.

முன்னெச்சரிக்கையோடு ஏற்பாடுகள்

முன்னெச்சரிக்கையோடு ஏற்பாடுகள்

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் இதில் பங்கேற்பதால், அவர்களின் உடல் நலம் குறித்தும், பாதுகாப்பு குறித்தும், மிகுந்த கவலை நிறைந்த எச்சரிக்கையோடு முன் ஏற்பாடுகளைச் செய்தோம். 14 மருத்துவர்கள், 25 மருத்துவ உதவியாளர்கள், 8 ஆம்புலன்சுகள் ஏற்பாடு செய்தோம். ஓடுபவர்கள் பருகுவதற்காகக் குடிதண்ணீர் ஏற்பாடு செய்து, காகிதக் குவளைகளையே பயன்படுத்தினோம். காலையில் அவர்களுக்கு எளிய சிற்றுண்டி வழங்கினோம்.

கட்சிக் கொடி கட்டாமல்

கட்சிக் கொடி கட்டாமல்

மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாததால், ஒரு இடத்திலும் கட்சிக் கொடிகளைக் கட்டவில்லை; கட்சி வண்ணத்தையும் பயன்படுத்தவில்லை. அரசு விழா போல், பல வண்ணக் கொடிகள் பளிச்சிட்டன. தமிழக அரசின் காவல்துறை,மிக்க ஈடுபாட்டுடன், இந்த மராத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, முழு அளவில் உதவியது. காலை நான்கு மணிக்கெல்லாம் நூற்றுக்கணக்கான காவலர்கள் கடமை ஆற்றத் தொடங்கினர்.

அதிகாலை 4 மணி முதல்

அதிகாலை 4 மணி முதல்

நம்ப முடியாத அதிசயம் நிகழ்ந்தது. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மாணவ மாணவிகள் ஆயத்தமாகி, பெற்றோருடன், ஆறு மணிக்கெல்லாம் மராத்தான் தொடங்கும் இடத்திற்கு வந்தது, தமிழக வரலாற்றில் இதுவரை நடைபெறாதது. இந்த மராத்தானுக்காக, எந்தச் சுவர் விளம்பரமும் செய்யவில்லை; தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரங்கள் தரவில்லை. பொதுமக்களின் மனதில் உள்ள பயம் காரணமாகவும், இதை நடத்துகின்றவன் மீதான நம்பிக்கை காரணமாகவும், 68,000 பேர் பதிவு செய்தனர்; 50,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஆர்வத்துடன் அனுப்பி வைத்தனர்; அவர்களே பிள்ளைகளை அழைத்து வந்தனர்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இதுவரை உலகில் நடைபெற்ற மராத்தானில், நியூ யார்க் நகரில்தான் 49,000 பேர் பங்கேற்றுள்ளனர். ஆனால், சென்னை மராத்தானில் 50,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால், இது கின்னஸ் சாதனை ஆகும். நாம் எதிர்பார்த்ததை விடப் பலமடங்கு வந்துள்ளார்களே, நெரிசலில் சிக்கி, காயமோ, உயிர்ச்சேதமோ பிள்ளைகளுக்கு ஏற்பட்டு விடக் கூடாதே என்று நான் அஞ்சிப் பதறியது என் மனசாட்சிக்குத்தான் தெரியும். அதனால்தான், மராத்தான் பாதையில் முன் யோசனை இன்றிக் குறுக்கே வந்தவர்களை நானே சென்று விரட்டினேன். சில இடங்களில், மாணவர்கள் கீழே விழுந்தபோது, எங்கள் தொண்டர்கள் உடனுக்குடன் உதவி பாதுகாத்தனர்.

எல்லாம் என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள்

எல்லாம் என் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள்

மாணவச் செல்வங்களே, நீங்கள் எல்லாம் என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்; உங்களை அனுப்பி வைத்த பெற்றோருக்குக் கை கூப்பி வணங்கி நன்றி கூறுகிறேன். மதுவினால் வரும் கேடுகளைக் களைய, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றப் பாடுபடுங்கள்; பள்ளிகள், கல்லூரிகளில் சாதி எண்ணங்களுக்கு இடம் தராதீர்; பல இலட்சம் மாணவர்களுள் ஐம்பது நூறு பேர் செய்யும் தவறு, அரிவாள் கத்திகளுடன் மோதும் வன்முறை, மாணவர் சமுதாயத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்; ஆசிரியர்களை மதித்து நடங்கள். பெற்றோரை வணங்குங்கள். தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் கவலைப்படாதீர்கள். இப்பொழுது உங்களுக்கு அரசியல் கட்சிகள் வேண்டாம்; குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அரசியலைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் உரை ஆற்றியபோது, மாணவர்கள் எழுப்பிய ஆரவாரம் விண்ணை முட்டியது. ஒரு மாணவனுக்குக் கூட காயம் ஏற்படவில்லை; இந்த நாளைப் போல என் வாழ்வில் நான் என்றும் மகிழ்ந்தது இல்லை.

சேற்றை வாரி வீசிய டைம்ஸ்

சேற்றை வாரி வீசிய டைம்ஸ்

ஆனால், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ், வைகோ கடற்கரையைக் குப்பைக் கிடங்காக்கி விட்டான் என்று சேற்றை வாரி வீசி இருக்கின்றது. நாங்கள் பிளாஸ்டிக் குவளைகளைப் பயன்படுத்தவில்லை. காகிதக் குவளைகளையே பயன்படுத்தினோம். உணவுப் பொட்டலங்கள் வழங்கினோம். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன், கழிவுகளை அப்புறப்படுத்துகின்ற வேலையில், வெயிலைப் பொருட்படுத்தாமல் பகல் 12 மணி வரை கடமை ஆற்றினர். ஆனால், சுற்றுச் சூழலைப் பற்றிய அக்கறையும், சமூகச் சிந்தனையும் எங்களுக்கு இல்லை என்று, தொண்டு இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் மீது பழியைப் போட்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா சாடி உள்ளது.

ஸ்டெர்லைட்டையே எதிர்ப்பவன் நான்

ஸ்டெர்லைட்டையே எதிர்ப்பவன் நான்

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, உலக கோடீஸ்வரனின் ஸ்டெர்லைட்டை எதிர்த்து, 18 ஆண்டுகளாக நான் அறப்போர் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். தற்போது மீத்தேனை எதிர்த்துக் களத்தில் நிற்கிறேன். நாங்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக, தன்னலம் இன்றி, விளம்பரம் இன்றிச் செய்த இந்த நல்ல காரியம், பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பெறவில்லை என்பதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னால் இயன்ற பணிகளை, எனது கடமையைச் செய்கிறேன்.

வன்மம் பாராட்டும் டைம்ஸ்

வன்மம் பாராட்டும் டைம்ஸ்

ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை, தமிழகத்தில் தொடங்கிய நாளில் இருந்து, என் மீது வன்மம் பாராட்டி வருகின்றது. இத்தனை ஆண்டுகளில், அபூர்வமாக ஓரிரு முறைதான் என் அறிக்கையை ஒருசில வரிகள் இடம்பெறும். அதையும் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரியும்.

காரணம்.. முல்லைப் பெரியாறு!

காரணம்.. முல்லைப் பெரியாறு!

முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க நான் கடுமையாகப் போராடியதால்தான், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையை இயக்கிக் கொண்டு இருக்கின்ற சில முக்கியமானவர்களுக்கு என் மீது கடுமையான வெறுப்பு உண்டு என்பதை நன்றாக அறிவேன். என் வாழ்வில் எந்தப் பத்திரிகையையும் மிரட்டுகின்ற தவறை நான் செய்தது இல்லை. பத்திரிகைச் சுதந்திரத்திற்காக, மிசாவில் ஓராண்டு, பொடாவில் 19 மாதம் சிறையில் இருந்தவன் நான்.

வஞ்சகத் திட்டத்துடன் டைம்ஸ்

வஞ்சகத் திட்டத்துடன் டைம்ஸ்

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊதுகுழல். என் மீது பொதுமக்களுக்கு நல்லெண்ணம் வந்து விடக் கூடாது என்பதற்காகவே, பல்வேறு எதிர்கால வஞ்சகத் திட்டங்களைக் கொண்டிருக்கின்ற கூட்டத்தின் பிரதிபலிப்புத்தான் எங்கள் முயற்சிகளைக் களங்கப்படுத்த முயலும் போக்கு ஆகும்.

தமிழகம் சீரழிவது டைம்ஸுக்கு இனிக்கிறது

தமிழகம் சீரழிவது டைம்ஸுக்கு இனிக்கிறது

கடற்கரை மதுக்கூடாரமாகவும் களியாட்ட முகாமாகவும் மாறுவது டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இனிக்கிறது. தமிழகம் எப்படியாவது சீரழியாதா என்ற நோக்கமும் தெரிகிறது. அதனால்தான், மேல்நாட்டு மதுவை மையாக்கி அச்சிட்டு உள்ளனர்.

ரசிகர்களான ம.பி. போலீஸார்

ரசிகர்களான ம.பி. போலீஸார்

கொடியவன் ராஜபக்சேயை எதிர்த்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்து, வெயிலிலும் மழையிலும் நானும் 1200 தோழர்களும் போராடியபோது, சாலையோரத்து மலக்கழிவுகளை நாங்கள் அகற்றினோம். உணவு அருந்தியபின், காகிதத் தட்டுகளை, குவளைகளைப் பைகளில் சேகரித்துக் குப்பைக் கிடங்குகளில் கொண்டு போய்ச் சேர்த்தோம். இதைக் கவனித்துக் கொண்டு இருந்த மத்தியப் பிரதேச காவல்துறை ஐ.ஜி. போராட்டத்தில் கைதாகி நாங்கள் விடுதலையானபோது, என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார், இத்தகைய ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வேறு எந்த அரசியல் கட்சிகளிடமும் நான் பார்த்தது இல்லை; எங்கள் காவல்துறையினர் உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டனர்; ஏன், உங்கள் ரசிகர்களாகவே ஆகி விட்டனர் என்றார்.

ஊழியக்காரனாக வேலை செய்வேன்

ஊழியக்காரனாக வேலை செய்வேன்

தமிழகத்தின் நன்மைக்காக, வருங்காலத் தலைமுறையின் நல்வாழ்வுக்காக, எள் அளவு சுயநலமும் இல்லாமல், தமிழ்நாட்டின் ஒரு ஊழியக்காரனாக வேலை செய்யும், என் மீது வீசப்படும் தாக்குதல்களை, நான் நேசிக்கும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கவே இந்த அறிக்கையைத் தந்து உள்ளேன் என்று கூறியுள்ளார் வைகோ.

English summary
MDMK chief Vaiko has slammed TOI for its report on MDMK marathon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X