தேர்தல் பிரச்சார பிஸிக்கு நடுவில் திடீர் விவசாயி அவதாரம் எடுத்த வைகோ
பல்லடம்: தமிழகத்தை இதுவரை ஆண்ட திமுகவும், அதிமுகவும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே பல்லடத்தில் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று பேசிய வைகோ ஏர் கலப்பை பிடித்து திடீர் விவசாயி அவதாரம் எடுத்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 94 விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு பைசா மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நடைபெற்ற விவசாயச் சங்கங்களின் போராட்டத்தின்போது, போலீஸாரால் பல விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அப்போது, நான் திமுகவில் இருந்தேன். இச்சம்பவத்தைக் கண்டித்து நான் திமுகவை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், நான் அதை செய்யவில்லை. அப்போது, நான் செய்த குற்றத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் அறிக்கை
அண்மையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தேர்தல் அறிக்கை அமுத சுரபி போன்றது. அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். இல்லையெனில் நான் உங்களுடன் சேர்ந்து போராடுவேன்.

அரசு மருத்துவமனை தரம் உயரும்
எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் உள்பட அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவர்.

விவசாய கடன்
பாண்டியாறு-புன்னம்புழா, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றுவோம். தமிழகத்தில் 30 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத கடன் விவசாயிகள் என்ற போர்வையில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு துரோகம்
இந்த விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து விட்டன. நான் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன். கொண்ட கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று கூறினார்.

ஏர் பிடித்த வைகோ
பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்ற வைகோ, திடீரென விவசாயி அவதாரம் எடுத்தார் ஏர் கலப்பையை பிடித்தும், கையில் சம்மட்டியை ஏந்தியும் திடிரென உற்சாக போஸ் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications