காவிரி விவசாயிகள் போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக மாநிலம் முரண்டு பிடித்ததாலும், காவிரி பாசனப் பகுதிகளில் உரிய நேரத்தில் குறுவை, சம்பா பயிர் சாகுபடி தொடங்க முடியவில்லை.
6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்களும், 14 லட்சம் ஏக்கம் சம்பா சாகுபடி பயிர்களும் 90 சதவீதம் காப்பாற்ற முடியாமல் கருகிப் போயின.
பயிர் சேதமுற்ற விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இழப்பு ஈட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பு ஈட்டுத் தொகை வழங்கப் படவில்லை என்று, இப்போதும் காவிரி பாசன விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள், தமிழ்நாட்டில் சாகுபடி காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான சாகுபடி காலத்தைக் கணக்கிடுவதால், தமிழக விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைப்பது இல்லை.
இதனால் பயிர்ச் சேதத்திற்கு விவசாயிகள் காப்பீடு செய்து இருந்தாலும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து காப்பீட்டுத் தொகையைப் பெற முடிவது இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, பயிர்க் காப்பீடு சாகுபடி காலத்தை, தமிழகத்திற்கு ஏற்றால் போல் மாற்றி அமைக்க வேண்டும்.
கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு தமிழக அரசே காப்பீட்டுத் தவணைத் தொகையைச் செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் சார்பில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ 370 கோடி வழங்காததால், விவசாயிகள் காப்பீட்டுத் தொகை பெற முடியாத நிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து 26 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக பெற்றால்தான் இந்த ஆண்டாவது காவிரிப்பாசன பகுதிகளில் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரிப் பாசனப் பகுதிகளில் விவசாயிகள் டிசம்பர் 3 ஆம் தேதி நடத்த இருக்கின்ற போராட்டத்தை மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கின்றது. கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை, விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைத்திட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
