For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் கூடாது... வைகோ, திருமா எதிர்ப்பு!

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளனர்

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேணடும்; எட்டு வாரங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதுடன், நவோதயா பள்ளிகள் அமைக்கத் தேவையான உள் கட்டமைப்புகளை அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி என்ற அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 598 இடங்களில் ஜவஹர் வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்திற்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்க பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன. நவோதயா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் 1986 ஆம் ஆண்டு முதல் இந்தப் பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கப்படவில்லை.

 கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது

கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது

பாஜக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தி மொழியை பல வகைகளில் திணிக்கவும், சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை புகுத்தவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை திணிக்க தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

 திணிக்க முயற்சி

திணிக்க முயற்சி

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கு ஏற்ப மாநில பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், கற்பித்தலை மேம்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன. பயிற்று மொழியைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய பள்ளிகளை மாநிலங்களில் திணிக்க முற்படுவது ஏற்கத்தக்கது அல்ல.

 பொதுப்பள்ளிகளை மேம்படுத்தலாம்

பொதுப்பள்ளிகளை மேம்படுத்தலாம்

ஏற்றத் தாழ்வுகள் அற்ற கல்வியை வழங்குதற்கு பொதுப்பள்ளிகளை மேம்படுத்துவதுதான் சால சிறந்தது ஆகும். நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மூலதன மற்றும் தொடர் செலவினைப் பொதுப்பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தினால், கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளுக்கு பயனளிப்பதாக இருக்கும்.

 தேவையில்லை

தேவையில்லை

நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் போதிய கல்வி வசதிகள் உள்ளன. மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பது கொள்கை முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 மேல்முறையீடு செய்யலாம்

மேல்முறையீடு செய்யலாம்

இதே நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்வர வேண்டும். டெல்லி பாஜக அரசின் இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகிவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

 திருமாவளவன் எதிர்ப்பு

திருமாவளவன் எதிர்ப்பு

இதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
'தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் அதுகுறித்து தமிழக அரசு எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணை மாநில அரசின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தலையிடுகிறது. இந்த ஆணையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

 எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும்

எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும்

நவோதாயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற திட்டம் 1986ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது கொண்டுவரப்பட்டது. அந்த பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் திரு எம்ஜிஆர் அவர்கள் தலைமையிலான அன்றைய தமிழக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக அந்த நிலை தான் நீடித்துவருகிறது. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலும் செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை என்று உறுதியாக இருந்தனர். அவர்கள் வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் இன்றைய அதிமுக அரசும் அதில் உறுதியாக இருந்து உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

 கல்வித் தரம் உயராது

கல்வித் தரம் உயராது

நவோதயா பள்ளிகளைக் கட்டுவதற்கு 30 ஏக்கர் நிலத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசுதான் இலவசமாக செய்து தரவேண்டும். ஆறாம் வகுப்பில் சேர்வதற்கே நீட் தேர்வைப் போன்று இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்தப் பள்ளிகளில் இந்தி என்பது மொழிப் பாடமாக மட்டுமின்றி பயிற்று மொழியாக உள்ளது. இது நேரடியாக இந்தி திணிப்புக்கு வழிகோலுவதாகும். நவோதயா பள்ளிகளால் ஒரு மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துவிடாது என்பதற்கு அப்பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள பீகாரும் உத்திரபிரதேசமுமே சாட்சி.

 கல்வியில் காவிமயம் கூடாது

கல்வியில் காவிமயம் கூடாது

நவோதயா பள்ளிகளை நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதற்கு பாஜக செய்து வரும் முயற்சியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி காவிமயமாகாமல் தடுப்பதற்குத் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
Tamilnadu political leaders Vaiko and Thirumavalavan urges government to appeal against Madurai Highcourt order to allow Navodhaya schools in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X