நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: வைகோ, வேல்முருகன் எச்சரிக்கை
சென்னை: நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை கைவிடாவிட்டால் தென் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர், வைகோவும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியில் பொட்டிப்புரம் கிராமத்தில், இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் (ஐ.என்.ஏ.) ரூ. 1500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கின்றது. 2010 மே மாதம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், இதற்கான கருத்துரு வெளியிடப்பட்டபோதே அதை முதன் முதலில் வன்மையாகக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டேன். மீண்டும் 2013 இல் மத்திய அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி எடுத்தபோதும், கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.

நியூட்ரினோ ஆய்வு மையத்தால் இயற்கை சுற்றுச் சூழல் நசமாகி, அந்த மலைப்பகுதிகளே அழிந்துவிடும் என்பதால், தேனி மாவட்ட மக்களும், விவசாயிகளும் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர். எனவே, மத்திய அரசு அப்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் பின்வாங்கியது.
முதலில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இமயமலை தேர்வு செய்யப்பட்டது. அங்குள்ள தட்பவெப்பம் சரிவராது என்பதால் கைவிடப்பட்டது. பிறகு அஸ்ஸாமிலும், கேரளாவிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், சிங்கார் பகுதி தேர்ந்து எடுக்கப்பட்டது. வனவிலங்கு சரணாலயம் இருப்பதாலும், எதிர்ப்புகள் வந்ததாலும் முயற்சி கைவிடப்பட்டது.
இப்போது, தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் மலைத்தொடரான ‘ஐம்பது ஊர் அப்பர் கரடு மலை' என்று மக்கள் அழைக்கும் பகுதியை இந்திய நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் தேர்வு செய்து இருக்கின்றது.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து 1.5. கிலோ மீட்டர் ஆழத்தில் 400 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட ஒரு சுரங்கம் அமைக்கப்படும். அருகிலேயே 170 அடி நீளம், 38 அடி அகலம், 15 அடி உயரம் கொண்ட இன்னொரு குகைச் சுரங்கமும் அமைக்கப்படுகிறது.
சுமார் 2.5. இலட்சம் கன சதுர மீட்டர் அளவுக்கு சுரங்கம் தோண்டுவதற்காக, மலையை வெடி வைத்துத் தகர்க்கும்போது, அந்தப் பகுதி முழுவதுமே பூமி அதிர்ச்சி ஏற்படுவதைப்போல குலுங்கும். மலையைத் துளைக்கும் கனரக வாகனங்களும், ராட்சத இயந்திரங்களும் ஊருக்குள் வர சாலை அமைக்கவும், கழிவுகளைக் கொட்டவும் விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படும். இதனால் தேனி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் அடியோடு நாசமாவதுடன், மலைப்பகுதி விவசாயமும் அழிந்துவிடும்.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் தொழிற்சாலையோ, வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனமோ அல்ல. இது முழுக்க முழுக்க ஆராய்ச்சிப் பணி மட்டுமே!
இத்தாலி நாட்டில் கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு ரசாயனக் கசிவு ஏற்பட்டதன் விளைவாக போராட்டம் வெடித்தது. மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டதால் இத்தாலி அரசு, நியூட்ரினோ ஆய்வு மையத்தை 2003 இல் மூடியது.
அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் இயற்கையை அழித்து மக்களை வெளியேற்ற நடக்கும் சதித் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
வேல்முருகன் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கு வேட்டு வைக்கும் வகையில் புதிய அணை கட்ட கேரளாவுக்கு ஒப்புதல் கொடுத்து முல்லைப் பெரியாறு பாசன மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்தது போதாதென்று மத்திய அரசு இப்போது "நியூட்ரினோ" திட்டத்தையும் அதே மக்கள் மீது திணிக்கிறது.
ஏற்கெனவே கூடங்குளம் அணு உலையால் தென் தமிழகமும், மீத்தேன் எரிவாயு திட்டத்தால் காவிரி பாசன மாவட்டங்களும் பாலைவனமாகும் அபாயம் இருக்கிறது. இன்றும் கூட மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடக் கோரி மாணவர் சமுதாயம் அந்த மண்ணில் போராடிக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் வஞ்சகத்தால் ஆற்று நீர் உரிமை அபகரிப்பால் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிப்பிக்கும் திட்டத்தால் மேற்கு மாவட்ட விவசாய விளைநிலங்கள் பறிபோகும் அச்சமும் அகன்றபாடில்லை.
வட தமிழகத்தில் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு நிலம் கொடுத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 30 ஆண்டுகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கான நீதி இன்னமும் கிடைத்தபாடில்லை.
பாலாற்றில் தமிழகத்துக்கான உரிமையை ஆந்திரா அபகரித்துக் கொண்டிருக்கிறது. கல்பாக்கம் அணு உலையால் நூற்றுக்கணக்கான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் பிடியில் சிக்கி நடைபிணங்களாக வாழும் அவல நிலை தொடருகிறது.
கடலூர் சிப்காட் நச்சு ஆலைகளால் தெற்காசியாவிலேயே மனிதர்கள் வாழத் தகுதியற்ற பிரதேசமாக ஐ.நா. மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் மேலாக தமிழர்களின் நிலத்தை கபளீகரம் செய்து அமைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்குகிற பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் போன்றவை கொள்ளை லாபம் அடித்த கையோடு தொழிற்சாலைகளை மூடிவிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.
இந்த வரிசையில் டி.சி.எஸ்., விப்ரோ போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது.
இப்படி கூடங்குளம், மீத்தேன் திட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் சர்வாதிகாரம் என பல முனைகளில் இருந்தும் தமிழக மக்கள் மீதான ஒடுக்குமுறை என்பது பெரும் ஆழிப்பேரலையாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களது வாழ்வுரிமையைக் காப்பாற்றவும் மீட்டெடுக்கவும் ஒரு பெரும் புரட்சியை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் எங்களது வாழ்க்கையோடு விளையாட நியூட்ரினோவையும் எங்கள் மண்ணில் மத்திய அரசு திணிப்பதை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.. இதற்கான எதிர்ப்புகளை இப்போது பொருட்டாக மதிக்காமல் இருக்கும் மத்திய அரசு எதிர்காலத்தில் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டை பாழ்படுத்தும் நியூட்ரினோ, கூடங்குளம், மீத்தேன் உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களையும் மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஜாதி, மத கட்சி எல்லைகளைக் கடந்து ஓரணியில் ஒன்று திரண்டு தமிழர்களாய் இணைந்து போராடி இந்தியப் பேரரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications